ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி

ரஜினியை மறைமுகமாக சாடிய யுகபாரதி
Updated on
1 min read

'கன்னிராசி' பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினியை மறைமுகமாக சாடிப் பேசியுள்ளார் பாடலாசிரியர் யுகபாரதி

முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி, யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கன்னிராசி'. இந்தப் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு முத்துக்குமரன் இயக்கிய 'தர்மபிரபு' வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 'கன்னிராசி' படத்தை வெளியீட்டு தயார்படுத்திவிட்டார்கள். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் பாடலாசிரியர் யுகபாரதி பேசும் போது, "‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார்.

இந்தப் படத்தில் கண்ணன் பாடல் ஒன்றைப் பார்த்திருப்பீர்கள். அதில் கொழு வைக்கக் கூடிய சிலைகளுக்கு இடையே, பெரியார் படத்தை வைப்பது போன்ற ஒரு காட்சியை இயக்குநர் முத்துக்குமரன் வைத்திருக்கிறார். அந்தக் காட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜினி பேசியதும், விஜய் சேதுபதி பேசியதிற்கான அர்த்தமாக அது இருந்தது.

இது முழுக்க அரசியல் திரைப்படம் அல்ல, குடும்பப் பாங்கான திரைப்படம். 18 ஆண்டுகளாக நிழல் போல என்னுடனே பயணித்தவர் முத்துக்குமரன். அனைவரும் காதலித்து திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என்ற நல்ல கருத்தை சமூகத்துக்கு இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

இந்த தருணத்தில் இந்தப் படத்துக்குத் தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். நீங்கள் ஆகச்சிறந்த படம் எடுத்தாலும், இன்னும் 5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் கிடைக்கப் போவதில்லை. கடுமையான சிக்கலிலும் இருக்கப் போகிறோம். அப்போது நமக்குத் தேவை நகைச்சுவை தான். அரசியல் நகைச்சுவை ஒருபுறம் நடந்தாலும், சினிமா நகைச்சுவை செய்து தான் ஆகவேண்டும்" என்று பேசினார் யுகபாரதி.

இச்சந்திப்பு முடிந்தவுடன் 'தேசிய விருது ஏன் கிடைக்காது என்றீர்கள்' என்று பத்திரிகையாளர்கள் யுகபாரதியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு "தேசிய விருது அறிவிப்பால் ஆனந்தம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த போது அதிர்ச்சியே கிடைத்தது. தமிழ் படங்கள் முக்கியமாக பிரதிநிதித்துவப்படவில்லை. கிருஷ்ணர், அர்ஜுனர் பற்றி பேசிக் கொண்டிருக்காமல், திரையுலகிற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான நடிகர்கள், கலைஞர்கள் இது குறித்துப் பேசவேண்டும் என விரும்புகிறேன். சிறந்த தமிழ் படம் என ஒன்று அறிவித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அறிவித்தது போல் உள்ளது" என்று பதிலளித்தார் யுகபாரதி.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற வெங்கய்யா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும் போது, பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் கிருஷ்ணர் - அர்ஜுனர் என்று குறிப்பிட்டார். இதையே பாடலாசிரியர் யுகபாரதி மறைமுகமாக சாடியிருப்பது நினைவுக் கூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in