

சமந்தா நடிப்பில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓ பேபி’ படத்தை, சீனாவிலும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ பேபி’. ‘மிஸ் க்ரானி’ என்ற கொரியன் படத்தின் தழுவல் இது. தெலுங்கில் சுமார் 35 கோடி ரூபாய் வரை வசூல்செய்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்தப் படத்தை சீனாவில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரியன் படம் சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்தப் படத்தையும் அங்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அப்படி சீனாவில் வெளியிடப்பட்டால், பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படம், இரண்டாவது இந்தியப் படம் என்ற பெருமையை ‘ஓ பேபி’ படம் பெறும். ஏற்கெனவே ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ‘மாம்’ படம் சீனாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
‘மிஸ் க்ரானி’ படத்தை அடிப்படையாக வைத்து தமிழில் ‘பேரழகி ஐஎஸ்ஓ’ என்ற படம் ரிலீஸானது. சி.விஜயன் இயக்கிய இந்தப் படத்தில் ஷில்பா மஞ்சுநாத், விவேக் ராஜ், சச்சு, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆனால், இந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை.