

தென்காசியில் ஆடியோ கேஸட் கடை வைத்திருக்கும் விக் ராந்த் - கல்லூரி மாணவி அர்த் தனா பினு இருவரும் காதலில் விழுகின் றனர். இந்த காதலுக்கு அர்த்தனாவின் தந்தை ரவி மரியா எதிர்ப்பு. விக்ராந் தின் அப்பாவான பசுபதி, கபடி விளை யாட்டுப் பிரியர். தனக்கு பிறகு மகனை கபடி வீரனாக்கிவிட வேண்டும் என்பது அவரது ஆசை. கபடிப் போட்டியை பார்க்கச் சென்றதால் தனது அரசுப் பேருந்து ஓட்டுநர் வேலையை இழக்கிறார். இது விக்ராந் துக்கு தெரிகிறது. ஏற்கெனவே கபடி மீது நாட்டம் இல்லாத அவர், கோபத்தில் தந்தையை திட்டிவிடுகிறார். இந்த சூழலில், தந்தையின் இளமைக் காலம் பற்றியும், அவர் ஒருங்கிணைத்த ‘வெண்ணிலா கபடி குழு’ அணி பற்றியும் அம்மா மூலம் அறிகிறார். அதன் பிறகு, விக்ராந்துக்கு கபடி மீது ஈர்ப்பு வருகிறதா? தந்தையின் கனவை நனவாக்கினாரா? அர்த்தனா பினு மீதான காதல் என்ன ஆனது? இத்தனைக்கும் விடை தருகிறது ‘வெண்ணிலா கபடி குழு 2’ களம்.
கடந்த 2009-ல் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ முதல் பாகத் தின் தொடர்ச்சியாக விரியும் திரைக் கதை. 1989-ல் நடக்கும் கதைக்களமாக சுசீந்திரனின் உதவியாளர் செல்வசேக ரன் இயக்கியுள்ளார். 1980-களில் தென் தமிழக கோயில் திருவிழாக்களில் கபடி விளையாட்டு எவ்வளவு முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது என்பது அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், காதல், குடும்ப பாசம் அளவுக்கு கபடி ஆட்டம் குறித்த நிகழ்வுகள் அழுத்தமாக இல்லாதது பெரிய பலவீனம். ஒரு ஆடியோ கேஸட் கடை, காதலி செல்லும் கல்லூரிப் பேருந்தை பின்தொடர்வது, காதலியின் வீட்டில் மாட்டிக்கொள்வது, காதலுக்கு நண்பர்கள் உதவுவது என முதல் பாதி முழுவதும் சலித்துப்போன மசாலாக்கள். ஆனால், அப்பா - மகன் சென்டி மென்ட் போன்றவற்றால் அதை ஈடுகட்ட முயற்சிக்கிறார் இயக்குநர்.
படத்தின் நாயகனோ என்று எண்ணும் அளவுக்கு பசுபதியின் பார்த்திர வார்ப்பு அருமை. பாசக்கார குடும்பத் தலைவனாக தேர்ந்த நடிப்பை வழங்குகிறார். கபடிக்காக வேலையை இழந்து நிற்பதாகட்டும்.. அடுத்த தலைமுறையை கபடிக்குள் நுழைக்க முயற்சிக்கும் இடமாகட்டும்.. அசத்துகிறார். படத்தில் கபடி மீதான ஈர்ப்பும், அழுத்தமும் பசுபதி வந்து போகும் ஒருசில காட்சிகளில் மட்டுமே தென்படுகின்றன.
அப்பாவின் ஆசைப்படி சென்னை செல்ல சம்மதிக்கும் விக்ராந்த், அந்த இடத்தில் எடுக்கும் திடீர் முடிவும், அதுதொடர்பான நடவடிக்கைகளும் சுவாரஸ்யம். அந்த இடத்தில் விக்ராந்த் மனதை நிறைக்கிறார். ஆனால், முந்தைய தலைமுறை இளைஞனின் சாயலை அவரால் முழுமையாக கொண்டுவர முடியவில்லை.
படம் முழுக்க பாவாடை, தாவணி யில் வரும் அர்த்தனா பினுவுக்கு வசனங்களும் குறைவு, நடிக்க வாய்ப் பும் குறைவு. கல்லூரிக்கு செல்வது, காதலில் விழுவது, முடிவில் அப்பா வின் சொல் பேச்சை கேட்பது என அவர் வந்துசெல்லும் பகுதிகளில் பெரிதாக வித்தியாசம் இல்லை.
பயிற்சியாளராக கிஷோர் குறையின்றி நடிக்கிறார். இடைவேளைக்குப் பிறகுதான் சூரி வருகிறார். ‘வெண்ணிலா கபடி குழு’வின் பரோட்டா காமெடி மூலம் இன்றைக்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் அவர், இந்த 2-ம் பாகத்தில் அவ்வளவாக மெனக்கிடவில்லை. காமெடியிலும் ஈர்க்கவில்லை. ரவி மரியா காது ஜவ்வு கிழியும் அளவுக்கு கத்திக் கொண்டே இருக்கிறார். கஞ்சா கருப்பு, அனுபமா குமார், அப்புக்குட்டி, சோனியா வெங்கட் என பல நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் உள்ளன.
செல்வகணேஷ் இசையில் பாடல் கள் சுமார் ரகம். தென்காசியையும், சுற்றியுள்ள கிராமங்களையும் உயிர்ப் போடு அழகாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி.
முதல் பாகத்தில் ஆடிய கலகலப்பான ஆட்ட நாயகர்கள், அதே மைதானம் என வைத்துக்கொண்டு புதிய கோணத்தில் விளையாடியிருக்க வேண்டிய ஆட்டம். கபடியில் அழுத்தம் சேர்த்து சுவாரஸ்ய திருப்பங்களோடு பயணித்திருந்தால் ‘வெண்ணிலா கபடி குழு 2’ வெற்றிக் கோப்பையை தட்டியிருக்கும்!