

'புலி' படத்தின் இசை வெளியீடு என்று ட்ரெய்லர் வெளியீடு இருக்காது என்று தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.
விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், பிரபு, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'புலி'. சிம்புதேவன் இயக்கி இருக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 17ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் எப்போதுமே ஒரு படத்தின் இசை வெளியீடு அன்று தான் ட்ரெய்லர் வெளியீடும் இருக்கும். சமூக வலைத்தளத்தில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு, படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பகிர்ந்து வருவார்கள்.
'புலி' ட்ரெய்லர் குறித்து தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸிடம் கேட்ட போது, "'புலி' படத்தின் ட்ரெய்லர் இசை வெளியீடு அன்று இருக்காது. ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.
ட்ரெய்லர் வெளியீட்டின் தேதிக்கும், படத்தின் கதைக்கும் சம்மந்தம் இருக்கிறது. அது எந்த தேதி என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்." என்று தெரிவித்திருக்கிறார்.