கதையைக் கேட்டு பேயாக நடிக்க சம்மதித்த சத்யராஜ்

கதையைக் கேட்டு பேயாக நடிக்க சம்மதித்த சத்யராஜ்
Updated on
1 min read

கடவுள், பேய் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இல்லாதபோதும், 'ஜாக்சன் துரை' கதையைக் கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சத்யராஜ்.

சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'ஜாக்சன் துரை'. ஸ்ரீ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை 'பர்மா' இயக்குநர் தரணிதரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடவுள், பேய் உள்ளிட்ட விஷயங்களில் நம்பிக்கை இல்லாத சத்யராஜ் எப்படி இக்கதையில் பேயாக நடிக்க சம்மதித்தார் என்று இயக்குநர் தரணிதரனிடம் கேள்வி எழுப்பிய போது, "முதலில் பேயாக நடிக்க வேண்டும் என்றவுடன் பேயாகவா என யோசித்தார். முதலில் கதையைக் கேளுங்கள் என்று கூறிவிட்டு முழுக்கதையையும் கூறினேன். நன்றாக இருக்கிறது கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்” என்றார்.

'ஜாக்சன் துரை' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்கள் ஆகிறது. சென்னையில் நடைபெற்று வருகிறது இப்படப்பிடிப்பு. இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள கிராமங்களில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் சிபிராஜை, கிராமத்தில் நிலவும் பிரச்சினையை சமாளிக்க அனுப்பி வைக்கிறார்கள். அங்கு அமானுஷ்யமாக சில விஷயங்கள் நடக்கிறது. அப்பிரச்சினையை சிபிராஜ் எப்படி முடித்து வைத்தார் என்பதே 'ஜாக்சன் துரை' படத்தின் கதை என்கிறது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in