

'புலி' படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கவில்லை என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே, விஜய் நடித்து வரும் பாத்திரம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. ஆனால், படம் சம்பந்தமாக படக்குழு எந்தொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, 'புலி'யில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் என்று தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தன. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறுத்திருக்கிறது.
"'புலி' படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கவில்லை. அது தவறான செய்தி" என்று எஸ்.கே.டி நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.