

‘‘காலண்டருக்கு படமெடுப்பதும் கிட்டத்தட்ட சினிமா எடுப்பதைப் போலத்தான். பொருத்தமான ஜோடி, அழகான இடம், தரமான தயாரிப்பு என்று முழுத் திறமையையும் காட்டவேண்டும்” என்கிறார், புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன்.
சிம்பு, விஜய்சேதுபதி, பிரியா ஆனந்த், தப்ஸி என்று தமிழ் சினிமா உலகின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து ‘மூன்ஸ்ட்ரக் 2015’ என்ற பெயரில் இவர் காலண்டரை வடிவமைத்திருக்கிறார். இந்த காலண்டர் வெளியீட்டு விழா இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. நடிகர்கள் கார்த்தி, ஜீவா, ஆர்யா உள்ளிட்ட திரையுலகினர் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
‘‘பிரகாசமான நிலவொளி சூழ்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்து மனம்விட்டு பேசும்போது மனதுக்குள் அளவில்லாத அன்பு வழியும். அந்த தருணத்தை குறிக்கும் வகையில்தான் இந்த ஆண்டு நான் வெளியிட்ட காலண்டருக்கு ‘மூன்ஸ்ட்ரக்’ என்று பெயர் வைத்தேன்’’ என்கிறார் கார்த்திக் சீனிவாசன்.
‘‘நடிகர், நடிகைகளை வித்தியாசமாக காட்ட வேண்டும். அதே நேரத்தில் நடிப்பை பிரதான தொழிலாக கொண்டிராத ஜோடிகளையும் சிறப்பாக காட்டவேண்டும் என்ற இரண்டு சவால்கள் என் முன் இருந்தன. அருண் விஜய் மனைவி ஆர்த்தி, பரத் மனைவி ஜெஸ்லி, காந்த் மனைவி வந்தனா இவர்கள் மூவரும் கேமராவுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு நிற்பவர்கள். அவர்களை இந்த காலண்டருக்காக படம்பிடித்தது, புதுமையாக அமைந்தது.
3 மாதங்கள் கடுமையாக உழைத்து இந்தக் காலண்டரை உருவாக்கியுள்ளோம். வித்தியாசமான உடைகள், லொக்கேஷன், 45-க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் என்று இந்தப் படப்பிடிப்பு ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இருந்தது” என்கிறார் கார்த்திக் சீனிவாசன்.