

ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி தெலுங்கு படம் ஒன்றின் மூலமாக திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமாகிறார்.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் - லிசி தம்பதியினரின் மகள் கல்யாணி. விக்ரம் நடிப்பில் வெளியான 'இருமுகன்' படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இவர் தற்போது நாயகியாக அறிமுகமாகிறார்.
இதற்கான முன்னணி இயக்குநர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா மகன் அகில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும், மலையாளத்தில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் ப்ரணவ் நடிக்கவுள்ள 'ஆதி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதிலும், நாயகி தேர்வுக்கான பணிகளில் கல்யாணியின் பெயரே முதல் இடத்தில் பரிசீலனையில் உள்ளது. இது குறித்த அறிவிப்பையும் பிரம்மாண்டமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் ப்ரியதர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிலும் மகளை அறிமுகப்படுத்த பல்வேறு முன்னணி இயக்குநர்களிடம் புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழிலும் விரைவில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் ஒப்பந்தமாவார் என்று தெரிவித்தார்கள்.