Published : 29 Nov 2013 00:00 am

Updated : 06 Jun 2017 15:24 pm

 

Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 03:24 PM

விடியும் முன் - ‘தி இந்து’ விமர்சனம்

ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் நான்கு சமூக விரோதிகளிடமிருந்து தப்பிப்பதற்குப் போராடும் நிகழ்வே ‘விடியும் முன்’.

பாலியல் தொழிலாளியாக ரேகா என்கிற காதாபாத்திரத்தில் பூஜா நடித்திருக்கிறார். பாலாவின் ‘நான் கடவுள்’ படத்திற்குப் பின் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின் நடிப்பதால் காமெடி, கமெர்ஷியல், பெரிய இயக்குநர், பாப்புலர் நடிகர் இப்படி வணிகக் காரணங்களை முன்னிறுத்தி நடிக்காமல் ஒரு வலுவான கதாபாத்திரத்தை சுமக்கும் வாய்ப்பை ஏற்றதிலும், அதைச் சிறப்புடன் வெளிப்படுத்தியதிலும் பூஜா மிளிர்கிறார்.

12 வயதுச் சிறுமி நந்தினியை (மாளவிகா) மிகவும் ஆபத்தான சூழலில் இருந்து மீட்டுக்கொண்டு ரேகா (பூஜா) ரயிலில் புறப்படும் சூழலில் கதை நகர்கிறது. அவர்களைத் தேடிப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்திற்குள் சிக்கிக்கொள்கிறார், புரோக்கரான சிங்காரம். அதற்கு லங்கன் என்ற ரவுடியின் உதவியை நாடுகிறார். லங்கனுக்குப் பணம், சிங்காரத்திற்கு அந்தச் சிறுமி என்று ஆரம்பிக்கும் தேடுதல், யாருடைய கட்டளைக்காக, தேவைக்காக என்கிற சஸ்பென்ஸ் முடிச்சுகளுடன் நகர்கிறது. லங்கன், சிங்காரம் ஆகியோருக்குப் பின்னணியில் இருப்பவர்கள் சின்னையா என்ற இளைஞனும் துரைசிங்கம் என்ற தாதாவும். எப்படியாவது இந்தச் சிறுமியைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று போராடும் காட்சிகளில் பூஜா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பூஜா, சிறுமி மாளவிகாவை முதல் தடவை பார்த்துவிட்டு தன்னுடன் அழைத்து வரும்போது ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்கும்போது, சிறுமி மாளவிகா, சாலையோரச் சுவரில் நந்தினி என்று எழுதிய விளம்பரப் பெயரைப் பார்த்து, தன்னுடைய பெயர் ‘நந்தினி’ என்று சொல்லும் காட்சியும், படத்தின் முடிவில், ‘‘என் நிஜப் பெயர் நந்தினியில்லை!’’ என்று சிறுமி சொல்லும்போது, ‘‘இருக்கட்டும் உனக்கு அந்தப் பெயரே அழகா இருக்கு!’’ என்று பூஜா கூறும் காட்சியிலும் புதிதாக ஒரு வாழ்க்கையை அமைத்து க்கொள்ளத் தயாராகும் உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணையும், அந்தப் பாலியல் தொழிலின் சூழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றப்பட வேண்டிய ஒரு சிறுமியையும் சுற்றிக் கதையை அமைத்த இயக்குநர் பாலாஜி கே. குமாரையும், அதனைக் காட்சிப்படுத்திய கேமராமேன் சிவகுமார் விஜயனையும் பாராட்டலாம்.

பூஜாவின் சொந்தக் குரல் சில இடங்களில் திணறினாலும் கேட்க நன்றாகவே இருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சில நிமிடங்கள் வந்தாலும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். சின்னையாவாக வரும் வினோத் கிஷன் தான் படத்தின் நாயகன். அவர் திரையில் வரும் காட்சிகளும், அவர் தந்தையைக் கொன்றது சரியான முடிவுதான் என்பதைக் காட்டும் சில நிமிட ப்ளாஷ்பேக் காட்சியும் சிறப்பாக உள்ளன.

கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை சில இடங்களில் பாடல் வரிகளைக் கேட்க விடவில்லை. எனினும் பின்னணி இசையில் தேறிவிட்டார். கலை, படத்தொகுப்பு, காட்சிப்படு த்தியிருக்கும் சூழல் எல்லாமும் சரியாக அமைந்திருக்கின்றன.

பெயருக்கேற்றபடி ஒரே ஒரு பொழுதில் எல்லாமே நடக்கின்றன என்பதால் விறுவிறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கதை இது. அதற்கேற்பப் பல திருப்பங்களையும், அதற்கான காரணங்களையும், குறைவான கதாபாத்திரங்களையும் அடுத்த டுத்த நிகழ்வுகளையும் கொண்டு நகர்கிறது படம். என்றாலும் திரைக்கதையிலும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியதிலும் இன்னும் சற்று வேகத்தைக் கூட்டியிரு க்கலாம். இந்த ஒரு விஷயத்தைத் தவிரப் பெரிய குறை எதுவும் இல்லை.

குழந்தைகள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பெரியவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்ற செய்தியை, கதையம்சம் குன்றாமல் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி.

இந்து டாக்கீஸ் மதிப்பீடு:

விடியும் முன், ஆவணத் தன்மையைத் தவிர்த்த விழிப்புணர்வுப் படம்.விடியும் முன்இயக்குநர் பாலாஜி கே. குமார்பூஜாவிடியும் முன் விமர்சனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

cartoon

புதிய வைரஸ்!

கார்ட்டூன்
x