

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் 'கோச்சடையான்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா, நாசர், ஆதி மற்றும் பலர் நடிப்பில், மோஷன் கேப்சர் தொழில்நுட்ப உதவியோடு செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் படம் 'கோச்சடையான்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மீடியா ஒன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பம் என்பதால் படத்தின் பணிகள் நீண்ட காலங்களாக நடைபெற்று வந்தது. இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு என்று பல முறை விளம்பரப்படுத்தபட்டு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படம் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் பிரதி தயாரிக்கும் பணிக்காக சீனாவிற்கு சென்றார் செளந்தர்யா. அதனைத் தொடர்ந்து படம் இன்னும் தாமதமாகும் என்று செய்திகள் உலா வந்தன.
இந்நிலையில் படத்தின் முதல் பிரதி தயாரான உடன், சென்சார் அதிகாரிகளுக்கு நேற்று திரையிட்டு காட்டப்பட்டது. படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு எவ்வித கட் இல்லாமல் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
இவ்வார இறுதியில் படத்தின் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. ஏப்ரல் 11 அல்லது 18 ஆகிய இருதேதிகளில் ஒரு தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.