

பார்வையாளர்களிடம் உடனடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது காட்சி ஊடகம். தொலைக்காட்சியே இன்று காட்சி ஊடக வரிசையில் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருக்கிறது. அதிக அளவிலான பார்வையாளர்களைத் தன்வசம் கவர்ந்துகொண்ட தொலைக்காட்சிக்கு முன்தணிக்கை என்பது கிடையாது. ஆனால் தொலைக்காட்சியின் தாயாக வருணிக்கப்படும் திரைப்படத்துறைக்கு நடைமுறையில் இருந்துவரும் தணிக்கை முறை, கடந்த 30 ஆண்டுகளாகவே கடும் விமர்சனங்களைச் சந்தித்துவருகிறது. நீதிமன்றத் தீர்ப்புகளே விமர்சிக்கப்படும் நிலையில், திரைப்படங்களுக்கான தணிக்கை முடிவுகள் நேர்மையானவையா என்ற கேள்வி முன்பை விட முக்கியத்துவம் பெற்றதாக மாறியிருக்கிறது. தணிக்கைத் துறையினர் இரட்டை அளவுகோல்களைக் கடைபிடிக்கின்றார்கள் என்ற முதன்மையான குற்றச்சாட்டே இதற்குக் காரணம்.
தணிக்கை விதிகள் ஏன்?
ஒரு திரைப்படம் ரசிகர்களாகிய பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்றதாக இருக்கிறதா, பொது நலன், பொது அமைதியைப் பாதிக்காத வகையில் அதன் உள்ளடக்கம் உள்ளதா, பண்பாட்டுக்கு இசைவாக இருக்கிறதா, வக்கிரமானதாக இல்லாமல் இருக்கிறதா என்பதையெல்லாம் மதிப்பீடு செய்வதாகச் சொல்கிறது தணிக்கைக் குழு. ஜாதி, மதம், மாநிலம், மொழி, பாலினம் ஆகியவை சார்ந்து துவேஷம், பிளவு ஏற்படுத்தாத வண்ணம் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டிய கடமை இக்குழுவுக்கு இருக்கிறது.
இது தொடர்பாக மத்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம், பல விதிகளையும், வரையறைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. இவற்றுக்கு உட்பட்டதாக ஒரு படம் இல்லாவிட்டால், ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள், குறியீடுகளை நீக்க ஆணையிட்டு, எந்த வயதுக்குரிய பார்வையாளர்கள் பார்க்கத் தகுந்த படம் என்பதற்கேற்ப சான்றிதழ் வழங்குகிறது. படத்தை உருவாக்கிய இயக்குனர், பணம் போட்ட தயாரிப்பாளர் இருவரும், தணிக்கை செய்யப்படும் சமயத்தில் பிரச்சினை வந்தால், எதிர்ப்புக் காட்டாமல் தணிக்கைக் குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. “அதாவது, ஒரு இயக்குனர் தணிக்கை விதிகளுக்கு உட்பட்டுத் தனது கற்பனைச் சிறகை அளவோடு வெட்டி வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ‘நடுவர் தீர்ப்பே இறுதியானது’ என்ற தணிக்கை குழுவின் கத்தரிக்குத் தனது கற்பனைச் சிறகை மட்டுமல்ல, தனது கருத்துச் சுதந்திரம் எனும் சிறகையும் இரையாகக் கொடுக்க வேண்டிய சூழல்தான் இந்திய அளவில் குறிப்பாகத் தமிழகத் தணிக்கைச் சூழலாக இருக்கிறது.” என்று துணிச்சலாகச் சொல்கிறார் முதல் திரைப்படத்தை இயக்கும் முயற்சியிருக்கும் பிரபல நவீன நாடக் கலைஞரான ஜெயாராவ்.
என்னதான் நடக்கிறது?
தணிக்கைக் குழுவுக்காக வகுக்கப்பட்டிருக்கும் விதிகள் ஒருபுறம் இருக்க, இந்த விதிகளுக்கு வெளியே, அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தன்னிச்சையாகக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள், அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கின்றன என்ற குமுறல் இயக்குனர்கள் தரப்பிலிருந்து தற்போது அதிகமாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. “ஆளும் அரசுகள், தணிக்கைக் குழு உறுப்பினர்’ பதவி கொடுத்துத் தன்னைக் கௌரவப்படுத்தியதற்கு நன்றிக் கடனாக, அரசையோ, அல்லது அரசுக்கு எதிரான உள்ளடக்கத்துடனோ வரும் படங்களுக்குக் கடுமையான வெட்டுகளைப் பரிந்துரைக்கிறார்கள். மேலும் அந்தப் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்க முடியாத சான்றிதழை வழங்குகிறார்கள்” என்கிறார் ‘மதுபானக்கடை’ படத்தின் மூலம், விமர்சகர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்த இளம் இயக்குநரான கமலக்கண்ணன்.
“மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் பலமடங்கு அதிகரித்து, கடந்த மூன்று தலைமுறைகளாக மது அருந்துவதை வாழ்க்கைமுறையின் ஒரு அங்கமாகவே வளர்த்து எடுத்திருக்கிறார்கள். இன்று மது விற்பனையால் வரும் வருமானம் அரசுக்கு முக்கியமானதாக இருக்கிறது. அரசு ஸ்டெடியாக இருக்க வேண்டும் என்பதற்காகக் குடிமக்களைத் தள்ளாட விடுவது ‘மக்கள் நலம் பேணும்’ அரசின் (வெல்ஃபேர் ஸ்டேட்)’ அரசியல்” அல்ல! என்பதை எனது படத்தின் உட்கருத்தாக வைத்துக் குடியின் ஊடான அரசியலைப் பகடி செய்யும் படமாக இயக்கியிருந்தேன். முக்கியமாகப் பள்ளி மாணவர்கள் மத்தியில், குளிர்பானம் போல மது புழங்கப்படுவதை வேதனையோடு காட்சிப்படுத்தினேன். படம் எந்த வகையிலும் பிரச்சாரமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகத் திரைமொழியை முன்னிறுத்தி, உள்ளடக்கத்தைப் பதுக்கி வைத்தேன். ஆனால் எனது படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. காரணம் கேட்டபோது நீங்கள் மதுக்கடைகளைக் காட்டுகிறீர்கள். அதனால்தான் ‘ஏ’ என்று மழுப்பினார்கள். குடிக்குப் பின்னால் இருக்கும் அரசியலைப் பற்றி படம் எடுக்கும்போது மதுபானக் கடையைக் கதைக்களம் ஆக்கியதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்று கேட்கிறார் கமலக்கண்ணன்.
இதுவே தமிழ்நாட்டுக்கு வெளியே தணிக்கை செய்திருந்தால், குறைந்தது ‘யூ/ஏ’ சான்றிதழாவது பெற்றிருக்க முடியும். ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதால், தொலைக்காட்சி உரிமை மூலம் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்ற தனது கனவும் தகர்ந்துவிட்டது என்கிறார் கமலக்கண்ணன். “மக்களிடையே மனமாற்றம் ஏற்படுத்தக்கூடிய எனது படம், தமிழகக் கட்சித் தொண்டர்களின் புகலிடமாக இருக்கும் தணிக்கைக் குழுவால், குரல்வளை நெறித்துக் கொல்லப்பட்டுவிட்டது. குடித்துவிட்டு ஆடும், படு ஆபாசமான குத்துப்பாடல் கொண்ட கலகலப்பு என்ற படத்துக்கு இதே தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியது” என்கிறார்.
கமலக்கண்ணன் சொல்வது போல யார் வேண்டுமானாலும் தணிக்கைக் குழு உறுப்பினர் ஆகிவிடலாம் என்ற நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறதா?
சினிமா தெரியாத உறுப்பினர்கள்!
“ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பரிந்துரைத்தால் யார் வேண்டுமானாலும், தணிக்கை குழு உறுப்பினராக முடியும். இவர்களுக்குத் திரைமொழி குறித்த பிரஞையோ, அல்லது திரைப்படத் துறையின் போக்கு குறித்தோ எதுவும் தெரியாது. அரசியலில் எந்தப் பதவியுமே கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் பலருக்குக் கொடுக்கப்படும் பதவிதான் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர் பதவி. இப்படி 50 முதல் 150 உறுப்பினர்கள்வரை ஒரு மாநில அரசு நியமித்துக்கொள்ளலாம். ஒரு படம் தணிக்கைக் குழுவுக்காகத் திரையிடப்படும்போது ஐந்து உறுப்பினர்களை ‘ரேண்டம்’ முறையில் அழைக்கிறார்கள். இவர்களுடன் தணிக்கைக் குழுவின் வட்டார இயக்குனர் என்ற அரசு அதிகாரியும் இருப்பார். இவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு. நான் கடைசியாக இயக்கிய ‘ஊச்சிதனை முகர்ந்தால்’ படத்துக்கு ‘யூ/ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். காரணம் கேட்டபோது பதின்பருவப் பெண் ராணுவ வீரர்களின் வல்லுறவால் கருவுறுவதைக் காட்டுகிறீர்கள். இது சைல்ட் பிரக்னென்ஸி. எனவே யூ/ஏ சான்றுதான் தர முடியும் என்றார்கள். ஆனால் எனது படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி, அந்தச் சான்றுடன் ஒளிபரப்ப முடியாது என்பதால், மறு தணிக்கை செய்து ‘யூ’ சான்றிதழ் பெற்று ஒளிபரப்பியது. இதுமட்டும் எப்படிச் சாத்தியமானது ” என்று கேட்கிறார் புகழேந்தி தங்கராஜ்.
“செல்வாக்கு பெற்ற நடிகர்களின் படங்களில் எத்தனை வன்முறையான காட்சி இடம்பெற்றாலும் இவர்கள் கண்களுக்குத் தெரியாது” என்றும் சொல்லும் புகழேந்தி, “தமிழகத் தணிக்கைக் குழு இரட்டை அளவுகோல்களுடன் செயல்படுகிறது. பிரபலமான இயக்குனர் படங்களுக்கும் இந்த ஒரு சார்பான சலுகை கிடைக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் தணிக்கைக் குழு உறுப்பினர்களின் தேர்வு முறை மாற வேண்டும்” என்று காட்டமாகச் சொல்கிறார் புகழேந்தி.
வேறுபடும் பார்வை
இவற்றுக்கு அப்பால், மாநிலத்துக்கு மாநிலம் தணிக்கையின் கண்கள் மாறுபடுவதைச் சுட்டிக்காட்டுகிறார் திரை விமர்சகரான நட்டி. “பாலிவுட்டில் ‘சுத்தேசி ரொமான்ஸ்’ என்றொரு இந்திப்படம். இந்திய இளைஞர்கள் மத்தியில் இன்று டேட்டிங் கலாச்சாரம் எத்தனை வேகமாகப் பரவிவிட்டது என்பதை மறைமுகமாக விவாதித்த படம்.அந்தப் படத்துக்கு அங்கே யூ/ஏ கொடுத்தார்கள். இப்படியொரு படத்தை எடுத்தால் தமிழகத் தணிக்கைக் குழு மொத்தப் படத்தையுமே தடை செய்துவிடும் என்பது உறுதி. அதேபோல இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாகப் படமெடுத்தால் தமிழ்நாட்டில் இன்னும் சிக்கல்தான். ஆனால் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த அஜேய் என்ற இயக்குநர். இலங்கை ஆயுதப் போராட்டக்களத்தைக் கதையாக்கி எடுத்த ’ராவண தேசம்’ ஆந்திராவில் சென்சார் ஆனதால் இங்கே எந்தத் தடையும் இல்லாமல் ரிலீஸ் ஆனது. இதிலிருந்தே மாநிலத்துக்கு மாநிலம் தணிக்கைக் குழுவின் பார்வை மாறுபடுவதை உணரலாம்.
அரசியல் தலையீடு, பெரிய நட்சத்திரங்கள், பெரிய நிறுவனங்களுக்குச் சலுகை தரும் போக்கு, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் அளவுகோல்கள் எனப் பல சிக்கல்கள் கொண்ட துறை இது. இப்படிப் பல முகம் காட்டும் தணிக்கை உலகம் சீர்திருத்தப்படாதவரை ஒருபோதும் முன்மாதிரித் தமிழ்ப் படங்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது என்று நட்டி சொல்வதில் இருக்கும் உண்மை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.