இனப்படுகொலையை நினைவூட்டிய முதல் பதிவு இறைவி- இயக்குநர் ராம்

இனப்படுகொலையை நினைவூட்டிய முதல் பதிவு இறைவி- இயக்குநர் ராம்
Updated on
2 min read

கார்த்திக் சுப்புராஜின் 3 படங்களில் இது தான் சிறந்த படம் என்று நான் நினைக்கிறேன் என இயக்குநர் ராம் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, பூஜா, கமாலினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'இறைவி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஞானவேல்ராஜா, அபினேஷ் இளங்கோவன் மற்றும் சி.வி.குமார் இணைந்து தயாரித்திருக்கிறார். இப்படத்தை தமிழகமெங்கும் கே.ஆர்.பிலிம்ஸ் வெளியிட்டு இருக்கிறது.

இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், வசூல் ரீதியில் இப்படத்துக்கு பெரியளவு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது இப்படம் குறித்து தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார் இயக்குநர் ராம். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில் பேசியிருப்பது:

"'பீட்சா', 'ஜிகர்தண்டா' இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் 3வது படம் 'இறைவி'. அவருடைய 3 படங்களில் இது தான் சிறந்த படம் என்று நான் நினைக்கிறேன். இப்படத்தில் வரக்கூடிய ஆண்கள், ஒரு சராசரி ஆன ஆண்கள் பெண்களுக்கு விளைவிக்கக் கூடிய எந்த தீங்கையும் விளைவிக்காத ஆண்கள். இன்னும் சொல்லப் போனால், ரொம்ப நல்ல ஆண்கள் என்று கூட சொல்லலாம்.

பெண்கள் மீது எந்தவிதமான நிலைமைகளைச் சொல்லுவார்களோ, அதெல்லாம் சொல்லாத ஆண்கள். அப்படிப்பட்ட ஆண்களே, பெண்களை எப்படி சித்ரவதைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை சொல்லக்கூடிய ஒரு படம். அதுவும், ஆணுடைய இயல்பான குணங்கள் பொறாமை, இச்சை, அடுத்தவருடைய பொருட்களை கவருக்கூடிய ஆசை, புகழுக்கும் வெற்றிக்குமான பேராசை, பொறுமையின்மை, முன் கோபம், பொறுப்பற்ற உணர்ச்சி, சுயநலம் இதெல்லாம் ஆணுடைய குணங்களாக இப்படம் சித்தரிக்கிறது.

இந்தக் குணநலன்களே ரொம்பவும் நேசிக்கக்கூடிய பெண்களை எப்படிப்பட்ட இடத்துக்கு தள்ளுது என்பதை சொல்லக்கூடிய ஒரு படம். இந்த வகையில் தமிழில் வந்த முதல் படம் இது என நினைக்கிறேன். சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல், இறுதிவரைக் கொண்டு போனது இக்கதையின் சாமர்த்தியம் என நான் நினைக்கிறேன். இதற்காகவும், அங்கெங்கு தெறிக்க கூடிய வசனங்களுக்காகவும், சில இடங்களின் காட்சியமைப்புக்காகவும் இது ஒரு நல்ல படம் என்று சொல்ல வைத்தது என சொல்லலாம்.

அப்புறம் இந்த படத்தினுடைய நடிப்பு. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அதிர வைக்கக்கூடிய, படபடப்பான ஒரு நடிப்பு. அதற்கு நேர் எதிராக விஜய் சேதுபதியின் நடிப்பு. ரொம்ப தன்மையாக நடித்திருந்தார். பாபி சிம்ஹா இப்படத்தில் ஒரு முழுமையான நடிகராக மாறியிருக்கிறார் என நினைக்கிறேன். அஞ்சலி ரொம்ப கவித்துமான, கணக்கச்சிதமான நடிப்பு. நிறைய நடிகர்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கான பாத்திரங்களுக்கு வலுச்சேர்ப்பது என்பது சவாலானது. அதில் கார்த்திக் சுப்புராஜ் வெற்றி பெற்றிருக்கிறார் என நினைக்கிறேன்.

இப்படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநராகவே நடித்திருக்கிறார். இப்படத்துக்கு அவர் எடுத்திருக்கும் படத்தின் பெயர் 'மே 17'. அந்த படத்தை எப்படியாவது வெளிக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அவர் படும் சிக்கல்கள் தான் இப்படத்தின் திரைக்கதையாக இருக்கிறது. 'மே 17' ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்தில் ஒண்ணே கால் லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த யுத்தத்தில் கடைசி நாள். அந்த யுத்தத்தில் மிக முக்கியமான நாளாகவும் சொல்லலாம். தமிழ் சினிமாவில் அந்த யுத்தத்தை, இனப்படுகொலையை ஞாபகப்படுத்தக் கூடிய முதல் பதிவாக இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் ரொம்ப தைரியமான முயற்சி என நினைக்கிறேன். 'மே 17' என்று பார்த்தவுடன் அப்படத்தைத் தாண்டி ஈழத்தில் நடந்த விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராம்.

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in