

அறிமுக இயக்குநர்களையும் அவர்களது கதைகளையும் மட்டுமே நம்பி கால்ஷீட் தருபவர் விஜய் சேதுபதி. தற்போது ரஞ்சித் ஜெயக்கொடியை நம்பிக் களமிறங்கியிருக்கிறார். ‘கற்றது தமிழ்’ படம் தொடங்கி இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ரஞ்சித். தனது அறிமுகப் படத்துக்கு ‘மெல்லிசை’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறார். சென்னையில் இடைவிடாமல் நடந்துவரும் படப்பிடிப்புக்கு இடையில் அவரை சந்தித்தோம்...
சாமானிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியை உங்கள் படத் தில் இசைக்கலைஞர் ஆக்கியிருக்கிறீர்கள் போலிருக்கிறதே?
நீங்கள் தருகிற எந்த கதாபாத்திரத்துக்குள்ளும் கூடுபாய்ந்து அமர்ந்துகொள்ளும் ஆற்றல்மிக்க இளம் கலைஞர் விஜய் சேதுபதி. இசையமைப்பாளர் என்ற முகமும் அவருக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. அவரைப் பீட்சா டெலிவரி பாயாகவும், சுமார் மூஞ்சிக் குமாராகவும் பார்த்த ரசிகர்கள் இதில் அவரை ஒரு இசைக்கலைஞனாகப் பார்ப்பார்கள். ஒரு இசை ஆல்பம் உருவாக்க முயலும் இசைக்கலைஞராக இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக காயத்ரி ஜோடி சேர்ந்திருக்கிறாரே?
இதில் எந்த தனி காரணமும் இல்லை. கதையை கேட்டிருந்த விஜய்சேதுபதி “இன்னும் 15 நாட்களுக்குள் படப்பிடிப்புக்கு கிளம்ப முடியுமா” என்று கேட்டார். நானும் எனது ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் தயாராகவே இருந்தோம். எனது இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் கம்போஸிங் வேலைகளை முன்பே முடித்துவிட்டார். ஆனால் உடனடியாக கதாநாயகி கிடைப்பது சிரமம். முக்கியமாக எனது கதாநாயகிக்கு நிஜத்திலும் வயலின் வாசிக்கத் தெரிந்திருந்தால் அந்தக் கதாபாத்திரம் இன்னும் அழகாக வந்துவிடும். அப்போதுதான் காயத்ரிக்கு வயலின் வாசிக்கத் தெரியும் என்று தெரிந்தது. மொத்தமாக கால்ஷீட் தரமுடியுமா என்று கேட்டபோது, முதலில் கதையை சொல்லுங்கள் பிடித்திருந்தால் தருகிறேன் என்றார். கதையைக் கேட்டதும். உங்கள் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்தப் படத்துக்குப் போகிறேன் என்றார். தற்போது 70% படப்பிடிப்பை முடித்துவிட்டோம். மீரா என்ற வயலின் டீச்சர் கதாபாத்திரத்திற்கு அத்தனை எளிய முகமாக அவர் பொருந்திப் போய்விட்டார்.
‘மெல்லிசை’ என்ற தலைப்பைப் பார்த் தால் காதல் கதைபோல தெரிகிறதே? இன்றைய டிரெண்டுக்கான படமா இது?
எனக்கு டிரெண்டுகள் மீது நம்பிக்கை கிடையாது. இப்போது நகைச்சுவைப் படங்களின் டிரெண்ட் என்றால் நான் சீரியஸான படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வேன். எனது படத்தில் எனது தனித்தன்மை இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். டிரெண்டை அடியொற்றி படமெடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இந்தப்படத்தில் கதிர், மீரா என்ற இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றிப் பின்னப்படும் வலைதான் கதைக்களம். இதில் காதலும் இருக்கிறது, சதியும் இருக்கிறது. அப்படியென்றால் இது த்ரில்லர் படமும் கிடையாது. எனது தனிப்பட்ட பிரச்சினைகள், உங்களுக்கு நகைச்சுவையாகத் தெரியலாம். உங்கள் பிரச்சினைகளை நான் புரிந்து கொள்ளாமல் போய்விடலாம். ஏன் சக மனிதனின் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், நம்மையும் அறியாமல் நம்மிடம் ரத்த அணுக்களைப் போல ஒட்டிக்கொண்டிருக்கும் சுயநலம் தான் காரணம். கதிர் - மீரா இருவரிடமும் இயல்பான காதலை இசை மலரச் செய்கிறது. ஆனால் அதன் தொடர்ச்சியாக நகர வாழ்வின் சுயநலம் அவர்களை எந்த எல்லைக்கு கொண்டுபோய் நிறுத்துகிறது, அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை.
மெல்லிசையில் இசையின் பங்கு எப்படி இருக்கிறது?
கதையை நகர்த்திச் செல்லும் அம்சமாகவே இசையைக் கையாள்கிறேன். இதில் பாடல்கள் மான்டேஜ்களாக மட்டுமே இருக்கும். இசையை திணிப்பது ஒரு விறுவிறுப்பான படத்திற்குள் சாத்தியமில்லாத ஒன்று. இதுபோன்ற கதைகளில் பாடல்கள் கதையின் ஒரு கூறாக இருக்க வேண்டுமே தவிர கதையை குத்திக் கிழித்து காயப்படுத்தும் வன்முறையை நிகழ்த்தக் கூடாது என்பது என் கருத்து.