

வனவாசம் முடிந்து வந்து விட்டார் வைகைப்புயல் வடிவேலு. இரண்டு அசத்தலான கதாபாத்திரங்கள். ஒன்று மாமன்னர் கிருஷ்ணதேவராயரை நினைவுபடுத்தும் கதாபாத்திரம், மற்றொன்று அவரது அமைச்சரவையில் ரத்தினமாக மின்னிய தெனாலிராமன். இந்த இரண்டிலும் எப்படிப் பொருந்தியிருக்கிறார் வடிவேலு? படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன், ’தி இந்து’வுக்காக பேச ஆரம்பித்தார்.
“ இந்தப் படத்தில் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தோட சாயல் கொஞ்சமும் வரக் கூடாது என்று நானும், வடிவேலுவும் முன்பே உறுதி எடுத்துக்கொண்டோம். வடிவேலுவுக்கு இருப்பதுபோன்ற ஞாபகசக்தியை வேறு யாரிடமும் பார்க்க முடியாது. படப்பிடிப்பில் நான் ஏதாவது ஒரு ஷாட் புலிகேசி படத்தில் இருப்பது போல வைத்தால், இந்த ஷாட் அந்தப் படத்துல இருக்கு தம்பி என்று சொல்லிவிடுவார். அதேபோல மன்னராகவும் மந்திரியாகவும் அவர் நடிப்பில் கொண்டுவந்திருக்கும் வித்தியாசம் பார்த்து மிரண்டு போய்விடுவீர்கள்.
இயக்குநராக நான் பாத்திரப்படைப்பில் வேறுபாட்டுடன் திரைக்கதை எழுதிவிடுவது சுலபம். ஆனால் அதை நடிப்பில் கொண்டுவருவது நடிகரின் கடமை. அதை ஊதித் தள்ளியிருக்கிறார் வடிவேலு. ஒரு காட்சியில் கூட நடிகர் வடிவேலாகத் தெரியமாட்டார்”
படத்தின் கதை என்ன?
“ வரலாற்றுக் களத்தில் கற்பனை கலந்து உண்மையைப் பேசும் படம் இது. தெனாலிராமன் என்று தலைப்பு வைத்து விட்டதால், வரலாற்றில் வாழ்ந்த தெனாலிராமனின் கதைகளில் இருந்து இரண்டை மட்டும் தேர்வு செய்திருக்கிறோம். அது ஊறுகாய்க்கு மட்டுதான். ஆனால் புத்திசாலித்தனமும் நகைச்சுவை உணர்வும் கொண்ட தெனாலிராமன் ஒரு மன்னரிடம் வேலை செய்தால், அவனுக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து கொண்டே இருந்தால், தெனாலிராமனை சுற்றியிருக்கும் மற்ற சகாக்கள் சும்மா இருப்பார்களா? தெனாலி ராமனை எப்படியாவது ஒழித்துக் கட்டவேண்டும் என்று நினைக்க மட்டார்களா? அப்படி தெனாலிராமனை ஒழித்து கட்ட நினைக்கும் சகாக்களிடமிருந்து தனது புத்திசாலித்தனத்தால் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை. இதில் இன்றைய சமகால அரசியல் இருக்கும். ஆனால் யாரையும் கிண்டல் அடித்து படம் இருக்காது. இன்றைய அரசியல் நிலவரம் அன்று இருந்தது என்பதுதான் இந்தக் கதையின் மையம்” என்று சொல்கிறார் யுவராஜ்.
வடிவேலுவைப் போலவே வனவாசத்தை முடித்துவரும் மற்றொரு நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. அவர் சினிமாவில்தான் இல்லையே தவிர, அவர் நகைச்சுவையை ஒளிபரப்பாவிட்டால் தமிழ்தொலைக்காட்சிகளுக்கு அன்றைய பொழுது நகராது என்பதுதான் நிலை. மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு அ.செந்தில்குமார் இயக்கும் ‘வாய்மை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை மாநாடு நடத்த வந்திருக்கிறார் கவுண்டமணி.
வடிவேலு அரச உடையில் ஆர்ப்பட்டம் பண்ண வருகிறார் என்றால், கவுண்டமணியோ கோட் சூட் அணிந்து நவநாகரீக மனிதராக வருகிறார். அதுவும் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணராக...! பாக்கியராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் ப்ரித்வி, பாரதிராஜா மகன் மனோஜ் என்று மூன்று முக்கிய இயக்குநர்களின் வாரிசுகள் நடிக்கும் இந்தப் படத்தில் கவுண்டமணிதான் படம் முழுவதும் கலகலப்பூட்டியுள்ளார் என்றார் இயக்குநர் செந்தில்குமார்
“ கதை சொல்லும்போதே கவுண்டமணி சார் அடிச்ச பன்ச் வசனங்கள் கொஞ்சநஞ்சமில்ல. ‘இங்க நிறைய பேர் இதயமே இல்லாம வாழ்றானுக. நீ என்னை இதய அறுவை சிகிச்சை நிபுணரா நடிக்கச் சொல்ற. எப்படியோ நம்ம நகைச்சுவைக்கு ஹார்ட் அட்டாக்கை தடுக்குற சக்தி இருக்குன்னு நம்பி வந்தே பார்த்தியா.. கண்டிப்பா நடிக்கிறேன். கதை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.’ என்று நடிக்க சம்மதித்தார். இதில் கவுண்டமணி சாருக்கு ஜோடி மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் ஊர்வசி காமெடி கலாட்டா பண்ணியிருக்காங்க.
படத்தில டாக்டர் பென்னியாக கவுண்டமணி நடிக்கிறார். முல்லைப் பெரியாறு அணை கட்டிய வெள்ளைக்காரர் பென்னி குயிக் மேல இருக்கற மரியாதை நிமித்தமா தன்னோட பேரை அப்படி வெச்சிருப்பார். இவரிடம் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்து சிகிச்சை எடுத்துட்டுப் போவாங்க. அப்போ ஒரே ஒரு டயலாக்லயே நம்ம வெளியுறவு அரசியலை, யார் மனசும் நோகாம நக்கல் அடிச்சிருக்கார். 'இப்படி படம் முழுக்க பன்ச்தான். ஐ யம் கம்பேக் வித் எ ஸ்மால் ஃப்ளாஷ்பேக்’னு சொல்லிகிட்டுத்தான் கவுண்டமணி படத்துல அறிமுகம் ஆகிறார். இனி அவருக்கு ப்ளாஷ்பேக் தேவைப்படாது” என்கிறார் செந்தில்குமார். இந்த இரண்டு மாபெரும் நகைச்சுவை மன்னர்களின் வருகைக்காக தமிழ்ரசிகர்களும் காத்திருக்கவே செய்கிறார்கள்.