

‘தளபதி 63’ படத்துக்காக நேப்பியர் பாலம் செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துவரும் படம் ‘தளபதி 63’. அட்லீ இயக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. அட்லீயின் ஃபேவரிட்டான நடிகை நயன்தாரா, விஜய் ஜோடியாக நடிக்கிறார். ‘வில்லு’ படத்துக்குப் பிறகு விஜய் - நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர்.
கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய்யின் அறிமுகப் பாடலை, 1000 குழந்தைகளுடன் சேர்ந்து விஜய் நடனமாடுமாறு படமாக்கியுள்ளார் அட்லீ.
தற்போது நேப்பியர் பாலம் சம்பந்தப்பட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, நேப்பியர் பாலம் போல செட் அமைத்து, அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
விஜய் - அட்லீ முதன்முறையாக இணைந்த ‘தெறி’ படத்திலும் நேப்பியர் பாலம் சம்பந்தப்பட்டக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். வில்லனாக நடித்த இயக்குநர் மகேந்திரன் மகனைக் கொன்று, நேப்பியர் பாலத்தின் அடியில்தான் தொங்க விட்டிருப்பார் விஜய்.
அந்தக் காட்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதாலும், ‘தெறி’ படம் ஹிட் என்ற சென்டிமென்டாலும் மறுபடியும் நேப்பியர் பாலம் தொடர்பான காட்சியை ‘தளபதி 63’ படத்திலும் வைத்துள்ளார் அட்லீ என்கிறார்கள்.