எல்லாப் புகழும் இறைவனுக்கே: பத்மஸ்ரீ விருது குறித்து டிரம்ஸ் சிவமணி நெகிழ்ச்சி

எல்லாப் புகழும் இறைவனுக்கே: பத்மஸ்ரீ விருது குறித்து டிரம்ஸ் சிவமணி நெகிழ்ச்சி
Updated on
1 min read

பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி எல்லாப் புகழும் இறைவனுக்கே என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பங்காரு அடிகளார் (ஆன்மிகம்), சரத் கமல் (விளையாட்டு), நர்த்தகி நடராஜ், (கலை) மதுரை சின்னப்பிள்ளை (சமூக சேவை), ஆர்.வி.ரமணி (கண் மருத்துவம்), டிரம்ஸ் சிவமணி (கலை), ராமசாமி வெங்கடசாமி (மருத்துவம்) ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருது குறித்து இசைக் கலைஞர் டிரம்ஸ் சிவமணி, "எல்லாப் புகழும் இறைவனுக்கே. நான் அகமதாபாத்தில் ஓர் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். எனது மகன் என்னைத் தொடர்பு கொண்டு இத்தகவலைத் தெரிவித்தார். இந்த விருதினை எனது தாயார் லக்‌ஷ்மி ஆனந்தனுக்கும் எனது தேசத்துக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்றார்.

இதேபோல் நர்த்தக நடராஜ் கூறும்போது, "நான் திருவனந்தபுரத்தில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். மேடையில் எனது நடனம் முடிந்தவுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இத்தகவலை அறிவித்தனர். எனக்கு இதில் பெரும் மகிழ்ச்சி" என்றார்.

ஆன்மிகத்துக்காக ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் பங்காரு அடிகளாருக்கு விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் விருது குறித்து பங்காரு அடிகளாரின் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக அவரது பி.ஆர்.ஓ ரவி தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு, 4 பேருக்கு பத்ம விபூஷண், 14 பேருக்கு பத்ம பூஷண், 94 பேருக்கு பத்மஸ்ரீ உட்பட மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 21 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை, 11 பேர் வெளிநாட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in