

தனக்கு ட்விட்டரில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நெட்டிசனை அறிவுப்பூர்வமாக வசைபாடியிருக்கிறார் நடிகை டாப்ஸி பன்னு.
தமிழில் 'ஆடுகளம்' படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிப் படங்களிலும் தனக்கென தனிச்சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்தியில் இவர் நடித்த 'பிங்க்' திரைப்படம் இவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. அது பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பந்தமான படம்.
இந்நிலையில், டாப்ஸி பன்னுவின் ட்விட்டர் பக்கத்தில் ஜொல்லர் ஒருவர் உங்களுடைய உடல் அங்கங்கள் எனக்குப் பிடிக்கும் எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு டாப்ஸி தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். "வாவ்.. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். எனக்கு குறிப்பாக எனது செரிப்ரம் ரொம்பப் பிடிக்கும். உங்களுக்குப் பிடித்த அங்கம் எது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
செரிப்ரம் என்பது பெருமூளை. இதுதான் நினைவாற்றல், உணர்வுகள், உணர்ச்சிகள், சுயாதீன செயல்பாடுகள், நல்லது கெட்டதை பகுப்பாய்வு செய்யும் திறன் என பெரும்பாலான வேலைகளைச் செய்கிறது. ஒரு மனிதன் நல்ல மனநலத்துடன் இருக்க செரிப்ரம் செயலாற்றல் அவசியம்.
தன்னைப் பொதுவெளியில் கேவலமாக வர்ணித்த நபருக்கு பெருமூளை வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் வகையிலேயே டாப்ஸி இந்த ட்வீட்டைப் பதிவு செய்திருக்கிறார்.
கூகுள் தேடலில் எகிறிய ரேட்டிங்!
இதற்கிடையில் டாப்ஸி குறிப்பிட்ட செரிப்ரம் (Cerebrum) என்னவாக இருக்கும் என்று நேற்றிரவு 9 மணிக்கு மேல் கூகுள் இந்தியாவில் அதிகம் பேர் தேடியுள்ளனர். இதையும் ஒரு நெட்டிசன் டாப்ஸிக்கு ஸ்க்ரீன் ஷாட்டுடன் பகிர்ந்து டேக் செய்திருக்கிறார். டாப்ஸியின் அங்கங்கள் பிடிக்கும் என ஆபாசப் பதிவிட்ட அக்கு பாண்டேவும் அவரது நண்பர்களும்தான் இந்தத் தேடலைச் செய்திருக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.