

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘நட்பே துணை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இசையமைப்பாளரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சுந்தர்.சி இந்தப் படத்தைத் தயாரித்தார். ‘மீசைய முறுக்கு’ படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் ஆதி. ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பார்த்திபன் தேசிங்கு, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அனகா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், கரு.பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கெளசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தையும் சுந்தர்.சி தயாரித்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஆதி இசையமைத்துள்ளார். மொத்தம் 8 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் மட்டும் 20 நாட்களுக்குப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருட ஆரம்பத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நாளை (நவம்பர் 4) மதியம் 12 மணிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்துக்கு ‘நட்பே துணை’ என்று தலைப்பு வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.