தளபதி 63 அப்டேட்: தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்

தளபதி 63 அப்டேட்: தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்
Updated on
1 min read

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, நவம்பர் 14-ம் தேதி வெளியிடப்பட்டது. அட்லீ இயக்கவுள்ள இப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது இப்படத்தின் முதற்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அட்லீ. இதன் படப்பிடிப்பு, 2019 ஜனவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், இப்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து இப்படத்தின் மூலம் விஜய்யுடன் நடிப்பதை விவேக் நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தினார். தற்போது யோகி பாபுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெர்சல்’, ‘சர்கார்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் முழுவதுமாக விளையாட்டை மையப்படுத்தி அமைத்திருக்கிறார் அட்லீ. இதில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்கவுள்ளார். இதுவரை விஜய் நடித்திராத கதாபாத்திரம் என்பதால், இதற்காக சில பயிற்சிகளையும் மேற்கொள்ள உள்ளார் விஜய். விளையாட்டை மையப்படுத்தியது என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவகையில் ஜனரஞ்சகமாகத் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் அட்லீ.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். 2019 தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘தளபதி 63’.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in