“அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா?” - விமர்சனங்களுக்கு சாய் அபயங்கர் பதில்!

“அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா?” - விமர்சனங்களுக்கு சாய் அபயங்கர் பதில்!
Updated on
1 min read

தனக்கும் அனிருத்துக்கும் இடையில் போட்டி நிலவுவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பதிலளித்துள்ளார்.

’பல்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது “அனிருத்துக்கும் உங்களுக்கும் போட்டி என்று விமர்சிக்கப்படுகிறதே?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அனிருத் நிறைய செய்துவிட்டார். நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். எங்களுக்குள் போட்டி என்றெல்லாம் எதுவும் கிடையாது. உங்கள் அனைவரது ஆசிர்வாதத்துடன் இன்னும் நிறைய கடினமாக உழைக்க விரும்புகிறேன். நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “இப்போது இருக்கும் இயக்குநர்கள் அனைவரும் புதுமையை விரும்புகின்றனர். நான் புதிதாக எதையாவது முயற்சி செய்ய நினைத்தால் அதை மிகவும் விரும்புகின்றனர். அதை அனுமதிக்கின்றனர். ஆல்பத்தில் பணியாற்றுவதும், திரைப்படங்களில் பணியாற்றுவதும் ஒரே மாதிரி அனுபவமாகத்தான் உள்ளது” என்று தெரிவித்தார்.

விளையாட்டுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘பல்டி’யை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்குகிறார். அல்போன்ஸ் புத்ரன், சோடா பாபுவாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாந்தனு பாக்யராஜ், ஷேன் நிகம் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

எஸ்டிகே ஃபிரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் சந்தோஷ் டி. குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆகியோர் தயாரிக்கின்றனர். அலெக்ஸ் ஜே. புலிக்கல் ஒளிப்பதிவு செய்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in