அருந்ததி: மகா புனிதவதியான கதை!

அருந்ததி: மகா புனிதவதியான கதை!
Updated on
2 min read

விடுதலைக்கு முந்தைய தமிழ் சினிமாவில், புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வெளியாயின. அப்படி வந்த திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றதால் அதுபோன்ற படங்கள் தொடர்ந்து உருவாயின. அதில் ஒன்று ‘அருந்ததி’.

முற்பிறப்பில் சண்டிகை என்ற பெயரில் பிறக்கும் அருந்ததி, வசிஷ்டரின் மனைவியாக வாழ்ந்து வருகிறார். ஒருநாள் வழக்கம்போல் அட்சதை செய்வதை மறந்து சமையல் வேலையில் பரபரப்பாக இருக்கிறார் சண்டிகை. வசிஷ்டர் அட்சதைக் கேட்டதும் வேகமாக ஓடி, அங்கு தேங்கியிருந்த அசுத்த நீரில் அட்சதை தயாரிக்கிறார். இதையறிந்த வசிஷ்டர், சண்டிகையை வெறுத்து வெளியேறுகிறார். கணவர் பிரிந்து சென்றதால் தற்கொலைக்கு முயல்கிறார் சண்டிகை. அப்போது அங்கு தோன்றிய சிவன், சண்டிகையை மீண்டும் பிறந்து வந்து வசிஷ்டரை மணந்து கொள்ளும்படி வரம் கொடுக்கிறார்.

சிவபக்தனான வீரசாம்பானின் மகளாக சண்டிகை பிறந்து அருந்ததி என்ற பெயருடன் வளர்கிறாள். ஒரு நாள் அருந்ததியின் தாய் வாசுகி, தன் தம்பிக்கு அருந்ததியை மணம் முடிக்க, குறி கேட்கிறாள். அருந்ததியை மூன்று நாள் வீட்டை விட்டு விலக்கி வைத்து பிறகு திருமணம் செய்யும்படி குறி சொல்லப்படுகிறது. அதன்படி தனிக் குடிசையில் அருந்ததி வைக்கப்படுகிறாள்.

அப்போது ஒரு நாள், ஈஸ்வரஜோதி காட்டும் வழியில் அருந்ததி, காட்டிலுள்ள ஒரு குடிசைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அங்கு அவள் கனவில் தோன்றும் சிவன், காலையில் வரும் விருந்தாளியைக் கணவனாக ஏற்கும்படி சொல்லி மறைகிறார். பிறகு என்ன நடக்கிறது என்று தொடரும் கதையில், இறுதியில் சிவபெருமான் தோன்றி ‘அருந்ததி மகா புனிதவதி’ என்பதை நிரூபித்து சப்தரிசி மண்டலத்தில் விண்மீனாக விளங்கும்படி, அருள் செய்வதாக முடியும்.

மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் இயக்கி தயாரித்தார். இதில் வசிஷ்டராக செருகளத்தூர் சாமாவும் அருந்ததியாக, யு.ஆர்.ஜீவரத்தினமும் நடித்தனர். நடிகையும் பாடகியுமான யு.ஆர்.ஜீவரத்தினம், தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். 1937-ம் ஆண்டில் வெளிவந்த ‘சதி அகல்யா’ படத்தில் தேவலோகப் பெண்ணாகத் தோன்றிய அவர், தொடர்ந்து, தாயுமானவர், சந்தனத்தேவன், உத்தம புத்திரன் என பல படங்களில் நடித்திருக்கிறார். கண்ணகி (1942) படத்தில் கவுந்தியடிகள் வேடத்தில் நடித்தவர் இவர்தான்.

அக்கினியாக, கன்னட நடிகர் ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். இவர் தமிழில் இந்தப் படத்துக்கு முன், கிருஷ்ணகுமார், சதி சுகன்யா ஆகிய படங்களில் நடித்திருந்தார். நாரதராக எஸ்.டி.சுப்பையா, வீர சாம்பானாக கே.கே.பெருமாள், கண்ணனாக என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம், பி.எஸ்.சிவபாக்கியம், காளி என். ரத்னம், டி.பி.பொன்னுசாமி பிள்ளை, கே.பி.காமாட்சி ஆகியோர் நடித்தனர்.

எம். டி.பார்த்தசாரதி, எஸ்.ராஜேஸ்வரராவ் ஆகியோர் இசையில், பாபநாசம் சிவன், எஸ்.வேல்சாமி கவி பாடல்களை எழுதினர். படத்தில் 17-க்கும் மேற்பட்ட பாடல்கள். செருகளத்தூர் சாமா, யு.ஆர். ஜீவரத்னம், பி.எஸ்.சிவபாக்கியம், எஸ்.டி.சுப்பையா, ஹொன்னப்ப பாகவதர் ஆகியோர் பாடியிருந்தனர். சில பாடல்கள் அப்போது ஹிட்டாயின.

1943-ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த இந்தப் படம் அப்போது வரவேற்பைப் பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in