“எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா?” – அஜித்குமார் கொலை சம்பவத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கேள்வி

“எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா?” – அஜித்குமார் கொலை சம்பவத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கேள்வி
Updated on
1 min read

அஜித்குமார் மரணம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ள நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா? அரசுப் பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல்போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், “லாக்கப் கொலைகள். பழிக்குப்பழி கொலைகள். வரதட்சணை கொடுமை தற்கொலைகள். வயது பாராமல் மிருகத்தனமான பாலியல் குற்றங்கள். கொடூரமான கொள்ளை சம்பவங்கள். அஜித்குமார் என்ற காவலாளி இளைஞர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்!

உயர் அதிகாரிகள் உத்தரவிட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் அடித்து கொல்பவர்களுக்கு மனதில் சிறிதாவது ஈவிரக்கம் வேண்டாமா? மிளகாய் பொடியை கரைத்து வாயில் ஊற்றுவதா? காரில் நகை இருந்ததற்கு ஆதாரம் என்ன? அப்படி இருந்தது என்றால் சாவியை ஏன் மற்றவர் கையில் கொடுக்க வேண்டும்? அவர் எடுத்ததை பார்த்தவர் யார்? ஏழைக்கு இதுதான் நீதியா?

அவருக்கும் அந்த காரில் வந்த பெண்களுக்கும் என்ன விரோதம்? பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கில் தீர்ப்பு என்ன? ஶ்ரீமதி மரண விஷயம் என்னவாயிற்று? நண்பர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தீர்ப்பு என்ன?

எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா? அரசுப் பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா? குற்றம் செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படுமா? இப்படி அனைவர் மனங்களிலும் எண்ணற்ற கேள்விகள்! காலமும், கடவுளும்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in