‘திடீரென பேய் வரும், திடுக்கிட மாட்டீர்கள்!’ - அவசரக் கல்யாணம்

‘திடீரென பேய் வரும், திடுக்கிட மாட்டீர்கள்!’ - அவசரக் கல்யாணம்
Updated on
1 min read

எழுபதுகளில் முன்னணி நடிகர்களாக இருந்த பலர், ஒரு ஆக்‌ஷன், சமூகப் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது, காமெடி படங்களுக்கும் தங்கள் கால்ஷீட்களை ஒதுக்கி வந்தனர்.

அதில் முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் நடித்து பல காமெடி படங்கள் அப்போது வெளிவந்தன. அப்படி ‘தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர் நடித்து வெளியான காமெடி படங்களில் ஒன்று, ‘அவசரக் கல்யாணம்’.

நண்பர்களான சேகரும் ரகுவும் வேலை தேடி சென்னை வருகிறார்கள். வந்ததுமே பணத்தைப் பறி கொடுத்து விடுகிறார்கள். பின்னர், பிச்சைக்காரி வேடத்தில் அலையும் பணக்காரியான கமலாவை யார் என தெரிந்துகொண்டு, பொய்ச்சொல்லி ஏமாற்றி மணந்து கொள்கிறார் ரகு. அவன் சொன்னது பொய் என்று சேகர் போட்டுக் கொடுக்க, முதலிரவு அன்றே வெளியேற்றப்படுகிறான், ரகு. இதனால் சேகர் மீது ரகுவுக்கு கோபம்.

இதற்கிடையே வழக்கறிஞரான வசந்தியை காதலிக்கிறான், சேகர். அவரைப் பழிவாங்க நினைக்கும் ரகு, சேகருக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டதாக வசந்தியிடம் சொல்கிறான். வசந்தி, சேகரை விரட்டிவிடுகிறார். இந்த இரண்டு ஜோடிகளும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் அவசரக் கல்யாணத்தின் கதை.

சேகராக ஜெய்சங்கர், ரகுவாக நாகேஷ் நடித்தனர். நாகேஷ் ஜோடி கமலாவாக ரமா பிரபா, வழக்கறிஞர் வசந்தியாக வாணி நடித்தனர். லாட்ஜ் ஓனராக வி.கே.ராமசாமி, கொள்ளைக்கூட்ட தலைவனாக எம்.ஆர்.ஆர்.வாசு, எஸ்.ராமராவ், ஐ.ஆர்.எஸ் உள்பட பலர் நடித்தனர்.

கதை, வசனத்தை பாலமுருகன் எழுத, வி.டி.தியாகராஜன் இயக்கினார். சுப்புலட்சுமி மூவிஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு டி.ஆர்.பாப்பா இசை அமைத்தார். பாடல்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜெய்சங்கருக்கு இணையான வேடம் நாகேஷுக்கு. வி.கே.ராமசாமியின் காமெடி பேசப்பட்டது. படம் வெளியான நேரத்தில் இப்படி விளம்பரம் செய்திருந்தார்கள்:

“அழகான காதல் காட்சிகள் உண்டு. அசிங்கத்தை காண மாட்டீர்கள்! சோகக் காட்சிகள் உண்டு. கண்ணீர் விடமாட்டீர்கள்! திடீரென்று பேய் வரும். திடுக்கிட மாட்டீர்கள்! சண்டைக் காட்சிகளும் உண்டு. அதிர்ச்சி அடைய மாட்டீர்கள்”.

1972 -ம் ஆண்டில் ஜெய்சங்கர் நாயகனாக நடித்து 15 திரைப்படங்கள் வெளியாயின. அந்த 15 படங்களும் வெற்றி பெற்றன. அதில் ஒன்று, இதே தேதியில் வெளியான இந்த ‘அவசரக் கல்யாணம்!’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in