‘கூலி’ தெலுங்கு உரிமையும் பெரும் விலைக்கு விற்பனை!

‘கூலி’ தெலுங்கு உரிமையும் பெரும் விலைக்கு விற்பனை!
Updated on
1 min read

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் தெலுங்கு உரிமையும் பெரும் விலைக்கு விற்பனையாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால் உரிமைகளை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் இதன் வெளிநாட்டு உரிமை ரூ.75 கோடிக்கு விற்பனையானது. இது பெரும் சாதனையாக கருதப்பட்டது. தற்போது அதேபோல் தெலுங்கு உரிமையும் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

‘கூலி’ படத்தின் தெலுங்கு உரிமையினை ஏசியன் சினிமாஸ் சுனில் நரங், சுரேஷ் பாபு மற்றும் தில் ராஜு ஆகியோர் இணைந்து கைப்பற்றி இருக்கிறார்கள். இதற்காக சுமார் ரூ.45 கோடி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ரூ.100 கோடி வசூல் செய்தால் மட்டுமே, இந்தத் தொகையை எடுக்க முடியும். இந்த விற்பனையும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், செளபின் சாகீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in