“போர் முடிந்துவிடும், தலைவர்கள் கைக்குலுக்குவர், ஆனால்…” - ஆண்ட்ரியாவின் கவனம் ஈர்க்கும் பதிவு

“போர் முடிந்துவிடும், தலைவர்கள் கைக்குலுக்குவர், ஆனால்…” - ஆண்ட்ரியாவின் கவனம் ஈர்க்கும் பதிவு
Updated on
1 min read

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நடிகை ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்டுவரும் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்து வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இந்திய ராணுவத்தை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இத்தகையச் சூழலில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பரவலான கவனம் ஈர்த்துள்ளது.

“போர் முடிவுக்கு வரும். தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள். அந்த மூதாட்டி தனது இறந்து போன மகனுக்காகக் காத்திருப்பாள். அந்தப் பெண் தனது அன்பான கணவருக்காகக் காத்திருப்பாள். அந்தக் குழந்தைகள் தங்கள் ஹீரோ தந்தைக்காகக் காத்திருப்பார்கள். நமது தாயகத்தை யார் விற்றார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான விலையை யார் கொடுத்தார்கள் என்பதை நான் கண்டேன்” என்ற பாலஸ்தீன கவிஞர் மஹ்மூத் தர்விஷ் எழுதிய கவிதையை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இடம்பெற செய்துள்ளார்.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலின் போதும் ஆண்ட்ரியாவின் பதிவு, இணையத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. அதில் “நமது நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. இச்சம்பவத்தினை ஒரு குறிப்பிட்ட மதம் / சமூகம் மீதான வெறுப்பாக திசைதிருப்பாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை. நான் அடிக்கடி என் கருத்தைப் பேசுவதில்லை, ஆனால் இதைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in