

2026-ல் ஏப்ரல் 14-ம் தேதி ‘தெறி’ மறுவெளியீடு செய்யப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
தாணு தயாரிப்பில் உருவான படம் ‘சச்சின்’. இப்போது அந்தப் படம் மறுவெளியீடு செய்யப்பட்டு, பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவருடைய தயாரிப்பில் விஜய் நடித்த ‘தெறி’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்று தாணு தெரிவித்திருக்கிறார். இதற்கு விஜய் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
விஜய் – அட்லி கூட்டணி இணைப்பில் உருவான படம் ‘தெறி’. தாணு தயாரித்த இப்படம் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. மாபெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், பிரபு, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் தயாரிப்பு செலவில் இருந்து இரண்டு மடங்கு தாணுவுக்கு லாபம் ஈட்டியது.
இந்த பிரம்மாண்ட வெற்றியால் சிங்களம், அசாமீஸ் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம் படுதோல்வியை தழுவியது. மேலும், தெலுங்கு ரீமேக் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.