

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்து வரும் படத்துக்கு ‘பறந்து போ’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ஹாட்ஸ்டார் நிறுவனம் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் படத்தினைத் தொடங்கினார்கள். 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் உள்ளது. இதில் மிர்ச்சி சிவா, க்ரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது இப்படத்துக்கு ‘பறந்து போ’ என தலைப்பிடப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப விண்ணப்பித்திருக்கிறார்கள். அதன்மூலம் இந்த தகவல் இணையத்தில் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது. முழுக்க காமெடி பின்னணியில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார் ராம்.
இதன் இறுதிகட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. அதனை முடித்து ஜனவரி 30-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை நடைபெறும் ரொட்டர்டோம் திரைப்பட விழாவுக்கு அனுப்ப வேண்டும். அதற்குள் பணிகளை முடிக்க படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.