ஆஸ்கர் விருது ரேஸில் ‘கங்குவா’ - ரசிகர்கள் வியப்பு

ஆஸ்கர் விருது ரேஸில் ‘கங்குவா’ - ரசிகர்கள் வியப்பு
Updated on
1 min read

97-வது ஆஸ்கர் விருதுகளுக்கான ரேஸில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழத்தியுள்ளது.

இன்னும் இரு மாதங்களில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளில் தெரிவு மற்றும் பரிந்துரைப் பட்டியலுக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், ஆஸ்கர் தெரிவுப் பட்டியலுக்கு போட்டியிட்ட 323 படங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தெரிவு பட்டியலுக்குப் பரிசீலனைக்கான தகுதி பெற்றதாக 207 படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 இந்தியப் படங்களில் ஒன்றாகவே ‘கங்குவா’ இருக்கிறது.

கங்குவா (தமிழ்), ஆடு ஜீவிதம் (மலையாளம்), சந்தோஷ் (இந்தி) ஸ்வதந்திர வீர் சவார்க்கர் (இந்தி), ஆல் வி இமேஜின் அஸ் எ லைட் (மலையாளம் - இந்தி), கேர்ள் வில் பி கேர்ள்ஸ் (இந்தி - ஆங்கிலம்) மற்றும் புதுல் (பெங்காலி) ஆகிய ஏழு இந்தியப் படங்களில் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்கர் தெரிவுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யாவின் ‘கங்குவா’ இடம்பெற்றதை அறிந்து இணையத்தில் ரசிகர்கள் வியந்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். கூடவே, சில பல கலாய்ப்பு மீம்களும் வெகுவாக தென்படுகின்றன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கங்குவா’. இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், நட்டி, கருணாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ, கோவை சரளா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பீரியட் ட்ராமாவான இப்படம் இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தின் நிகழ்வுகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. ஞானவேல் ராஜா படத்தை தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் வெளியான நாள் முதல் எதிர்மறை விமர்சனங்களால் வசூல் பின்தங்கியது. இதனாலேயே ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான உருவான இப்படம் ரூ.100 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகின. ஓடிடியில் வெளியான பிறகு கலவையான விமர்சனங்கள் வந்ததும் கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in