

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் நவம்பர் 7-ம் தேதி ‘தக் லைஃப்’ படத்தின் சிறப்பு வீடியோ காட்சி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. சிம்பு, த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 7-ம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ‘தக் லைஃப்’ படத்தின் சிறப்பு வீடியோ காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் கமல் நடிக்கும் புதிய படங்களின் அறிவிப்பும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.