

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69-வது படத்தில் பாபி தியோல் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெங்கட்பிரபுவின் ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால் 69-வது படமான இப்படம் தான் கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
நடிகர் பாபி தியோலை பொறுத்தவரை பாலிவுட்டில் அவர் ஆரம்ப காலத்தில் காதல் நாயகனாக வலம் வந்தாலும், சமீபத்தில் அவர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளியான ‘அனிமல்’ பட வில்லன் கதாபாத்திரம் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் இடையே பரவலான கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து, அவர் தமிழில் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்து விஜய்க்கு வில்லனாகிறார். மேலும் ‘விஜய் 69’ பட அப்டேட்டுகள் அடுத்தடுத்து நாட்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.