நவம்பர் 27-ல் 13 தமிழ் படங்கள் ரிலீஸ்

நவம்பர் 27-ல் 13 தமிழ் படங்கள் ரிலீஸ்
Updated on: 
1 min read

சென்னை: வரும் நவம்பர் 27-ஆம் தேதி, ஒரே நாளில் 13 புதிய தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. நடப்பு ஆண்டில் ஒரே வாரத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெளியாவது இதுவே முதல் முறையாகும். 

இந்த வார வெளியீடுகளையும் சேர்த்து, 2026-ஆம் ஆண்டில் இதுவரை வெளியான நேரடித் தமிழ்ப் படங்களின் மொத்த எண்ணிக்கை 200-ஐக் கடந்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமையன்று ‘606’, ‘சிட்டுக்குறிஞ்சி’, ‘டெலிவரி பாய்’, ‘கோ 2 கோ’, ‘ஜெடூசி’, ‘மதுர மோசடி’, ‘மின்னும் ஓர் இரவு’, ‘மௌன மொழிகள்’, ‘நெல்லை பாய்ஸ்’, ‘பேய் பிடிச்சிருக்கு’, ‘நிறம்’, ‘வட மஞ்சுவிரட்டு’ மற்றும் ‘சிக்னல் அட் 11:30’ ஆகிய 13 திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா நடிப்பில் உருவாகியுள்ள 'டெலிவரி பாய்', முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள 'நிறம்', பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ நாயகனாக நடித்துள்ள 'மௌன மொழிகள்' மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் டி.இமான் இசையமைத்துள்ள 'சிக்னல் அட் 11:30' ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

இருப்பினும், ஒரே நாளில் 13 சிறு பட்ஜெட் படங்கள் மோதுவதால், திரையரங்குகள் ஒதுக்கீட்டில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வெளியான தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி நடித்த 'ஓம்' திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்து திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

அதனுடன் விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' மற்றும் கீர்த்தி சுரேஷின் 'சத்தியவான் சாவித்திரி' ஆகிய படங்களும் திரையரங்குகளில் உள்ளதால், புதிதாக வெளியாகும் 13 படங்களுக்கும் போதிய திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சில படங்கள் கடைசி நேரத்தில் தங்களது வெளியீட்டைத் தள்ளிவைக்கவும் வாய்ப்புள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025-ஆம் ஆண்டில் நவம்பர் மாத இறுதிக்குள் 258 தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்த நிலையில், நடப்பு 2026-ஆம் ஆண்டில் 50 படங்கள் குறைவாகவே வெளியாகியுள்ளன. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் இதுவரை 'ஜெயிலர் 2', 'ஜனநாயகன்', 'கருப்பு', 'பராசக்தி', 'ஓம்' உள்ளிட்ட 9 தமிழ்ப் படங்கள் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், ஆண்டின் இறுதியை நோக்கிச் செல்லும் கோலிவுட்டில் சிறு பட்ஜெட் படங்களின் வெளியீட்டு எண்ணிக்கை தற்போது வேகமெடுத்துள்ளது.

நவம்பர் 27-ல் 13 தமிழ் படங்கள் ரிலீஸ்
இந்தியாவில் டிக்கெட் முன்பதிவில் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புதிய சாதனை

X