

மும்பை: மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’, திரையரங்குகளில் வெளியாவதற்கு இன்னும் 24 நாட்கள் உள்ள நிலையிலேயே இந்திய பாக்ஸ் ஆபிஸில் முன்பதிவு மூலம் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் இந்திய அளவில் இதுவரை ரூ.52.21 கோடி முன்பதிவு வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம், முந்தைய மார்வெல் படமான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' முன்பதிவு சாதனையை 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' முறியடித்துள்ளது.
உலகளவில் டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம், ஒரு நாள் முன்னதாகவே இந்தியாவில் டிசம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முன்னெடுத்த #OpenDoomsdayBooking என்ற ஹேஷ்டேக் பிரச்சாரத்தை தொடர்ந்து, வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் முன்பதிவு தொடங்கப்பட்டது.
முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே ரூ.10 கோடி வசூலைக் கடந்த இப்படத்துக்கு, புக்மைஷோ தளத்தில் முதல் நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகின. தற்போது வரை நாடு முழுவதும் 7,611 காட்சிகளுக்கு சுமார் 8.25 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அதிகாலை 12.01 மணி முதல் இரவு 11.55 மணி வரை 24 மணி நேரமும் இடைவிடாத காட்சிகளுக்கு பல்வேறு திரையரங்குகள் ஏற்பாடு செய்துள்ளன.
குறிப்பாக, கேரளாவின் சில திரையரங்குகளில் நள்ளிரவு சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. அதேபோல், சென்னை, மும்பை, டெல்லி என்.சி.ஆர், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய முக்கிய நகரங்களில் முதல் நாள் காட்சிகள் ஏறக்குறைய நிரம்பிவிட்டன. மும்பை மற்றும் டெல்லியில் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்கப்படும் 4DX மற்றும் இன்ஃபினிட்டி விஷன் போன்ற பிரீமியம் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் முழுமையாக விற்பனையாகியுள்ளன.
ரூசோ ப்ரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அயர்ன் மேன் கதாபாத்திரத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற ராபர்ட் டவுனி ஜூனியர் இம்முறை டாக்டர் டூம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவருடன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கிறிஸ் எவான்ஸ், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், அந்தோணி மேக்கி, ஃப்ளோரன்ஸ் பியூ, வனேசா கிர்பி, டாம் ஹிடில்ஸ்டன், இயன் மெக்கெல்லன், பேட்ரிக் ஸ்டீவர்ட், சிமு லியு மற்றும் சானிங் டாட்டம் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்துள்ளது.
மூன்று வெவ்வேறு மார்வெல் யுனிவர்ஸ்களை சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்து டாக்டர் டூமை எதிர்கொள்ளும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. டிசம்பர் 18-ஆம் தேதி ஹாலிவுட்டின் மற்றொரு பிரம்மாண்டப் படமான 'ட்யூன்: பாகம் 3' வெளியாகவுள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இரு பெரும் படங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவ உள்ளது.