Last Updated : 10 May, 2024 03:44 PM

 

Published : 10 May 2024 03:44 PM
Last Updated : 10 May 2024 03:44 PM

ஸ்டார் Review: கனவுகளைத் துரத்தும் போராட்டமும், சில தாக்கங்களும்!

சுக்குநூறாக உடையும் கனவுகளின் கண்ணாடி சிதில்களை ஒவ்வொன்றாக சேர்த்து மீண்டும் கனவு மாளிகை கட்ட முயற்சிப்பதே ‘ஸ்டார்’. சினிமாவில் நாயகனாகும் ஆசையை சிறுவயதிலிருந்தே பற்றிப்பிடித்திருக்கிறார் கலையரசன் (கவின்). இதே போன்றதொரு கனவைக் கண்டு, அதை எட்ட முடியாமல் வாழ்வில் தோல்வியுற்று, கிடைத்த வேலையை தொடர்பவர் அவரது தந்தை பாண்டியன் (லால்). திரையுலகில் அடியெடுத்து வைக்க, பணமும், பொறுமையும் தேவை என்பதால் தாய்க்கு அதில் ஈடுபாடில்லை.

ஈடேறாமல் போன தன்னுடைய லட்சியம், மகனுக்காவது அகப்பட வேண்டும் என கலையரசனை ஹீரோவாக்க உறுதுணையாக நிற்கிறார் தந்தை பாண்டியன். காலம் ‘விபத்து’ என்றொரு வலையை விரித்து நாயகனாக துடிக்கும் கலையரசனின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. இறுதியில் ‘ஸ்டார்’ ஆனாரா, இல்லையா என்பது படத்தின் திரைக்கதை.

லட்சியத்தை மட்டும் மூலதனமாக கொண்ட ஒருவனின் வாழ்க்கையில் நிகழும் ஏற்ற, இறக்கங்களை கமர்ஷியல் சினிமாத் தன்மையுடன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் இளன். காதல், சண்டை, காலேஜ் கலாட்டா என ஜாலியாக தொடங்கும் படம் மெல்ல நகர்ந்து மையக்கதைக்கு வரும்போது சூடுபிடிக்கிறது. மகனின் கனவுகளுக்கு சிறகளிக்கும் தந்தை, வாய்ப்புக்காக கவின் மன்றாடும் இடங்கள், ஒரு போன் காலுக்காக காத்திருப்பது, சினிமாவால் தூக்கி ஏறியப்பட்டவர்களின் வாழ்வு, எதிர்பாராத விபத்து, உடைந்து போவது, பிடிக்காத வேலை, புறக்கணிப்பு, இடையில் யவுன் கொடுத்த சர்ப்ரைஸ் என அதன்போக்கில் நகர்கிறது படம்.

“சுயநலமில்லாதது கலை; அதனால் மாற்றத்தை நிகழ்த்த முடியும்”, “உருவாக்கறவன விட , ரசிக்குறவனுக்கு தான் அது சொந்தம்”, “உன் கண்ணிவெடிகள் யாவும்” என தொடங்கும் வசனம் சிறப்பாக எழுத்தப்பட்டுள்ளது.

“நடிப்பால் எதை வேண்டுமானாலும் மறக்கடிக்கலாம்” என்ற வசனத்தை இறுதியில் நிரூபித்து கனெக்ட் செய்த விதம், வழக்கத்திலிருந்து விலகிய க்ளைமாக்ஸ் முயற்சி பாராட்டத்தக்கது. படையப்பா, குஷி பட ரெஃபரன்ஸ், பெப்சி டீசர்ட், சுற்றும் பெல்ட், வின்டேஜ் நோக்கியா மொபைல், பைக், என 90, 2000-ம் காலட்ட நினைவுகளை கிளறியது ரசிக்க வைத்தது.

அதேநேரம் முழுமையாக ஒரு கலைஞனின் வாழ்க்கையை அழுத்தத்துடன் படம் பதிவு செய்கிறதா என்றால் அது கேள்வியே. எதற்காக இரண்டு நாயகிகள்? அவர்களுக்கான தேவை என்ன? மும்பை பயணம் நாயகன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதுடன், இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் நெளிய வைப்பதை தவிர்க்க முடியவில்லை.

கண்ணாடியைப் பார்த்து உடைந்து அழும் காட்சியாகட்டும், சிங்கிள் ஷாட்டில் உணர்ச்சிப்பொங்க பேசுவது, பதற்றத்தையும் பயத்தையும் சுமந்து நடித்தது, ரொமான்ஸ், பெண் வேடம் என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார் கவின். அவரது கரியரில் முக்கியமான படமான இதனை முடிந்த அளவுக்கு தன்னுடைய தோளில் சுமந்து சென்றிருக்கிறார். தந்தையின் வலியை உணர்வுகளில் உருக்கியிருக்கிறால் லால். அட்டகாசம்!

கவினின் தாயாக வரும் கீதா கைலாசம் ஓவர் ஆக்டிங் என்ற எண்ணத்தை கொடுக்காமலில்லை. நாயகி ப்ரீத்தி முகுந்தன் சொன்னதை செய்திருக்கிறார். அதிதி போகன்கர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், லிப் சிங் பிரச்சினை எட்டிப் பார்க்கவே செய்கிறது. இவர்களைத் தவிர்த்து மாறன், காதல் சுகுமார், நிவேதிதா, பாண்டியன் குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் மற்றொரு ஹீரோ யுவன். எழுத்து சோர்வடையும் காட்சிகளில் தன் இசையால் அதனை மெருக்கேற்றியும், குரலால் காட்சிகளில் ஈரத்தை தடவியும் ஈர்க்கிறார். அதிலும் அந்த சர்ப்ரைஸ் முயற்சி பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சி. அவரின் பாடல்கள் கதையோட்டத்துடன் கரைகின்றன. எழில் அரசின் கேமரா இறுதிக்காட்சியில் அதகளம் செய்கிறது. அதிலும் சில காட்சிகளில் ஃப்ரேம்கள் கவனிக்க வைக்கின்றன. ப்ரதீப் ராகவ்வின் ‘ஷார்ப்’ கட்ஸ் ஓரளவு கைகொடுக்கிறது.

‘The universe always falls in love with a stubborn heart’ என்ற வசனம் மூலம் கனவுகளை நோக்கி துவளாமல் போராடத் தூண்டும் படம் சர்ப்ரைஸ், சில ஐடியாக்கள், சில எமோஷன்களாக கவர்கிறது. ஒட்டுமொத்தமாக ஜொலிக்கிறதா என்றால் அது கேள்வியே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x