

சென்னை: “விஜய் நடிக்கும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மே மாதம் படத்தின் சிங்கிள் வெளியாகலாம். ஒரு ரசிகனாக விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை” என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ஜே.பேபி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் விஜய்யின் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் குறித்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “படம் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. முதல் சிங்கிள் மே மாதம் ஆகிவிடும். இப்படம் ரீமேக்கெல்லாம் கிடையாது. புதிய ஐடியா. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள். கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த மாதத்துடன் படத்தின் க்ளைமாக்ஸே முடிந்துவிடும். அடுத்து ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் மட்டும் தான் உள்ளது. அத்துடன் படம் முடிந்துவிடும். நிறைய பாடல்கள் உள்ளன. என்ஜாய் பண்ணலாம். கதாபாத்திரமாக நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். அஜித், விஜய் இரண்டு பேருமே இயக்குநரின் நடிகர்கள்தான். ஆரம்பத்தில் இருவருடன் பணியாற்றுவது பயமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் ஜாலியாக கையாள்வார்கள்.அவர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி.
ஒரு ரசிகனாக விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. நான் அவரிடமே சொல்லியிருக்கிறேன். படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் வேலைகள் உள்ளன. தொழில்நுட்ப ரீதியாக நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. அதனால் இப்போது படம் வெளியீடு குறித்தோ மற்ற விவரங்களையோ சொல்ல முடியாது. பண்டிகை நாளில் படம் வெளியாகலாம்” என்றார்.