

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், விஜய்யுடன் பத்து மாதங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். அட்லி, தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில், ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த அறிவிப்பை விஜய் ரசிகர்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா. உங்களிடம் சத்தியம் செய்து கொடுத்தது போலவே இந்த புகைப்படத்தை பட அறிவிப்புக்குப் பிறகு தான் வெளியிடுகிறேன். (இந்த புகைப்படம் 10 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது) ஆம். கனவுகள் நனவாகியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யுடன் வெங்கட்பிரபு எடுத்துக் கொண்ட இந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.