சமூக வலைதளங்களில் இருந்து ‘பிரேக்’ - ‘லியோ’ வெற்றி விழாவுக்குப் பிறகு ரத்னகுமார் அறிவிப்பு

சமூக வலைதளங்களில் இருந்து ‘பிரேக்’ - ‘லியோ’ வெற்றி விழாவுக்குப் பிறகு ரத்னகுமார் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நேற்று நடந்துமுடிந்த நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் வரை சமூக வலைதளங்களிலில் இருந்து ‘பிரேக்’ எடுத்துக் கொள்வதாக இயக்குநரும், ‘லியோ’ படத்தின் எழுத்தாளருமான ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.01) நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ் 'பிக் பாஸ்' ஜனனி, படத் தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழா நடந்து முடிந்த மறுநாளான இன்று (நவ.02) தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ரத்னகுமார், “எழுத்துப் பணிக்காக ஆஃப்லைன் செல்கிறேன். எனது அடுத்த பட அறிவிப்பு வரும் வரை சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

’லியோ’ வெற்றி விழாவில் ரத்னகுமார் பேசிய கருத்துகள் சர்ச்சையானதால்தான் அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விழாவில் நேற்று பேசிய ரத்னகுமார், “விஜயின் படங்களைப் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பணிவாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசிக்கு கீழ் வந்துதான் ஆக வேண்டும்” என்று கூறினார்.

இதைவைத்து ரஜினியைத்தான் ரத்னகுமார் வம்பிழுப்பதாக ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டின்போது, ‘கழுகு உயரே பறந்து கொண்டிருக்கும். காக்கை அதனை தொந்தரவு செய்யும்’ என்று ரஜினி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in