

சென்னை: “இயக்குநர் வெற்றிமாறனை எனது படங்களில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘லியோ’ வெற்றி விழாவில் பேசிய அவர். “எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நன்றி. லவ் யூ. பூஜைக்குப் பிறகு இந்தப் படம் தொடர்பாக எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை. முதல் மேடை, வெற்றி விழா மேடை என்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் எந்த புரமோஷனும் படத்துக்கு செய்யவில்லை. இசை வெளியீட்டு விழா நடக்காதது எனக்கும் வருத்தம்தான். கடைசி 20 நாட்கள் எடிட்டர் பிலோமின் ராஜ் ஸ்டூடியோவிலேயே தங்கியிருந்த எனது உதவி இயக்குநர்கள் 18 பேரை மேடைக்கு அழைக்கிறேன்” என கூறி அவர்களை அழைத்து கவுரப்படுத்தினார்.
மேலும் பேசிய அவர், “இயக்குநர் வெற்றிமாறனை எனது 2-3 படங்களில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அதை மறுத்துவிட்டார். அவரை நடிகராக மாற்ற வேண்டும் என ஆசை. விரைவில் அப்படி மாற்றுவேன் என நினைக்கிறேன். படத்தின் இறுதி வெர்ஷனை பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார். மிகவும் சந்தோஷமாக இருந்தது” என்றார். அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், ‘என்ன கிஃப்ட் எதிர்பார்க்கிறீர்கள்?’ என கேட்டதற்கு, “ஹெலிகாப்டருக்கு பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். காத்திருக்கிறேன்” என்றார் லோகேஷ்.