Published : 08 Oct 2023 12:48 PM
Last Updated : 08 Oct 2023 12:48 PM

“சம்பளமே இல்லாமல் நடிக்கிறேன் என்றேன்” - ‘அயலான்’ குறித்து சிவகார்த்திகேயன்

சென்னை: “ஒருக்கட்டத்தில் படத்துக்கு நிதி தேவை என்ற நிலை வந்தபோது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன். ரவிக்குமாரின் நேர்மைக்காக அவர் ஜெயிப்பார்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “'அயலான்' படம் தீபாவளிக்கு வருவதாக சொல்லி இருந்தோம். ஆனால், சிஜி பணிகளுக்கு இன்னும் சில காலம் இருந்தால் இன்னும் சிறப்பாக புதிய விஷயங்களை சேர்க்கலாம் என சிஜி பணிகள் செய்யும் நிறுவனத்திடம் இருந்து ரெக்வஸ்ட் வந்தது. அதனால், பொங்கலுக்கு வெளியீட்டை மாற்றினோம். நீங்கள் தற்போது டீசரில் பார்க்கும் ஏலியன் வேர்ல்ட் இப்போது உருவாக்கியது.

தீபாவளியை விட பொங்கல் விடுமுறை இன்னும் சிறப்பாக உள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை திருச்சியில் பார்த்தபோது ரசிகர்கள் டைம் மிஷின் என்ற கான்செப்ட்டை அவ்வளவு ரசித்துக் கொண்டாடினார்கள். அதைப் பார்த்துவிட்டு இயக்குநர் ரவிக்குமாருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன். அதன் பிறகு அவரை சந்தித்து கதை கேட்டேன். இந்த ஏலியன் கதையை ஐந்து நிமிடங்கள் சொன்னார். உடனே சம்மதம் சொன்னேன்.

முதல் படத்தில் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் அவருடன் இணைந்தேன். அவர் தமிழ் மீடியத்தில் படித்தவர். கல்லூரி படிப்பை கரஸில் முடித்தார். படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்துவிட்டார் ரவிக்குமார். படத்தை 95 நாட்களில் எடுத்து முடித்து விட்டார். அவ்வளவு பிரிப்பரேஷன். இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசை இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவரும் கதைக் கேட்டு உடனே சம்மதம் சொன்னார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ரஹ்மானுக்கு என்ன சம்பளம் கொடுத்து கமிட் செய்தோமோ அதையே இப்போது வரை ஓகே சொல்லி எங்களுக்காக புதிய டியூன் இப்போது வரை போட்டுக் கொடுத்தார். அது அவருடைய பெருந்தன்மை. டீசர் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார். இந்தியாவில் லார்ஜ் ஃபார்மேட் கேமராவில் எடுத்த முதல் படம் 'அயலான்'தான். நீரஜ் சார், முத்துராஜ் சார் என பல ஸ்ட்ராங் டெக்னீஷியன்ஸ் இதில் உள்ளார்கள். இதேபோன்று ஏலியன், ஸ்பேஸ் ஷிப் வைத்து இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். ஒரு படம் முயற்சி செய்தார். அதற்கு பிறகு நீங்கள் தான் என சொன்னார்கள். அதனால், எம்.ஜி.ஆர்.க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என யூடியூப் தலைப்பு வைத்து விடாதீர்கள். அதுபோன்ற கன்செப்ட் என்றுதான் சொன்னேன்.

படத்தில் 4600 வி.எஃப்.எக்ஸ் ஷாட்ஸ் உள்ளது. இந்தப் படத்தின் மொத்த டெக்னீஷியன்ஸூம் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள். சிஜி கம்பெனி அம்பத்தூரில்தான் உள்ளது. இதற்கு வெளிநாடு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் படம் முடித்தவுடன் நானும் ரவிக்குமாரும் சேர்ந்து இன்னொரு படம் செய்கிறோம். ஒருக்கட்டத்தில் படத்துக்கு நிதி தேவை என்ற நிலை வந்தபோது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன். ரவிக்குமாரின் நேர்மைக்காக அவர் ஜெயிப்பார். இதுபோன்ற சிறந்த வி.எஃப்.எக்ஸ்ஸோடு சிறந்த படம் இந்தியாவில் இல்லை என்பதை நம்பிக்கையோடு சொல்வேன். ’அயலான்’ படத்தைக் குடும்பத்தோடு திரையரங்குகளில் பொங்கலுக்கு போய் பார்க்கலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x