ஈர்க்கும் இசை, கார்த்திக் சுப்பராஜ் மேஜிக்... - ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசர் எப்படி?

ஈர்க்கும் இசை, கார்த்திக் சுப்பராஜ் மேஜிக்... - ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீசர் எப்படி?

Published on

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில் பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி? - 1975-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டீசர் தொடங்குகிறது. ‘ஜிகர்தண்டா’ முதல் பாகத்தைப் போலேவே இந்தப் பாகத்திலும் படத்தை இயக்குவது கான்சப்டாக இருப்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. அதில் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக இருக்கிறார். அவருக்கான 70’ஸ் உடை அலங்காரம் கவனம் பெறுகிறது. பாபி சிம்ஹா போன்றதொரு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸின் லுக் மற்றும் உடல்மொழி ஈர்க்கிறது. ரெட்ரோ கலந்த பின்னணி இசையில் சந்தோஷ் நாரயணன் மிரட்டியிருப்பதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக டீசர் வெளிப்படுத்துகிறது. கார்த்திக் சுப்பராஜ் நிகழ்த்தியிருக்கும் மேஜிக்கை தீபாவளி அன்று திரையரங்குகளில் காணலாம். டீசர் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in