

யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் 12 ஆயிரம் திரைகளில் வெளியாக இருக்கிறது.
‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தைத் தொடர்ந்து, நான்கு வருட இடைவெளிக்கு பின் யஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘டாக்ஸிக்’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்கான முன்பதிவு ஆகஸ்ட் 21-ம் தேதி வரலட்சுமி விரத நாளன்று தொடங்குகிறது.
வெளியீட்டுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக தொடங்கும் முன்பதிவு படத்துக்கான வரவேற்பை இன்னும் அதிகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே, இந்தப் படம் உலகம் முழுவதும் 12,000 திரைகளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய திரைப்படங்களில் மிகப் பெரிய அளவிலான வெளியீடாக இது அமையும்.
இந்தப் படம் இந்திய அளவிலும் பரந்த விநியோகத்தைக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் ‘டாக்ஸிக்’ படம் ட்ரைடென்ட் ஆர்ட் மற்றும் ஃபைவ் ஸ்டார் செந்தில் மூலமாக திங்க் ஸ்டுடியோஸ், எஸ் பிக்சர்ஸ், ஒயிட் நைட்ஸால் வெளியிடப்படுகிறது.
அதேபோல், கர்நாடகாவில் படத்தை கேவிஎன் புரடெக்சன்ஸும், கேரளாவில் பானரோமா ஃபிலிம்ஸும், ஆந்திரா, தெலங்கானாவில் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸும் வெளியிடுகின்றன. வட இந்தியா, நேபாளத்துக்கான விநியோக உரிமையை ஏஏ ஃபிலிம்ஸ் பெற்றுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘டக்ஸிக்’. இந்தப் படத்தில் யஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கன்னடம், ஆங்கில மொழிகளில் தயாராகி இருக்கும் இப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.