‘டிசி’யில் ரசிகர்களை ஈர்த்த ‘சந்திரா’ - யார் இந்த வாமிகா?

‘டிசி’யில் ரசிகர்களை ஈர்த்த ‘சந்திரா’ - யார் இந்த வாமிகா?
Updated on
2 min read

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'டிசி'. லோகேஷ் கனகராஜின் நடிப்பு ஒருபுறம் ரசிகர்களை ஈர்த்தாலும், மறுபுறம் 'சந்திரா' என்ற வலிமையான கதாபாத்திரத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடிகை வாமிகா கபி.

கிளாசிக் 'தேவதாஸ்' கதையின் நவீன பதிப்பாக உருவாகியுள்ள 'டிசி' படத்தில், பாலியல் தொழிலாளியாக சுரண்டப்படும் 'சந்திரா' என்ற சிக்கலான பாத்திரத்தில் வாமிகா கபி நடித்துள்ளார்.

சமூக அமைப்பால் கைவிடப்பட்ட இந்தக் கதாபாத்திரத்தின் வலிகளையும், அதேசமயத்தில் தனக்குள்ளே இருக்கும் அதீத நம்பிக்கையையும் தனது கண்கள் மூலமாகவே வாமிகா கடத்தியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் ஏற்று நடித்த தேவதாஸ் என்ற வன்முறை நிறைந்த கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்துக்கு, நம்பிக்கையின் வெளிச்சமாகச் சந்திரா உருவெடுக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் திரையில் மிகவும் நுட்பமாக வெளிப்பட்டு, படத்தின் கனத்தை ரசிகர்களுக்கு உணர்த்துகின்றன.

சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்த பார்வதி கதாபாத்திரம் தேவதாஸின் கடந்த கால உறவை வெளிப்படுத்த, துன்பங்களை சந்தித்தும் வாழத் துடிக்கும் சந்திரா கதாபாத்திரம் தேவதாஸுக்கு ஒரு புதிய வாழ்க்கைப் பாதையைக் காட்டுகிறது.

யார் இந்த வாமிகா? 

சண்டிகரில் 1993-ஆம் ஆண்டு பிறந்த வாமிகா, இளம் வயதிலேயே கலைத் துறையில் தனது கால்பதிக்கத் தொடங்கினார். இம்தியாஸ் அலி இயக்கத்தில் வெளியான ‘ஜப் வீ மெட்’ இந்திப் படத்தில் சிறிய வேடத்தில் திரையில் தோன்றிய அவர், தொடர்ந்து ‘லவ் ஆஜ் கால்’, ‘மாவ்சம்’ உள்ளிட்ட படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தார்.

பின்னர்  2013-ல் 'சிக்ஸ்டீன்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பஞ்சாபி திரையுலகில் கவனம் செலுத்தி 'து மேரா 22 மே தேரா 22' போன்ற வெற்றிப் படங்கள் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

பின்னர் மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் இணைந்து அவர் நடித்த 'கோதா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, அதில் மல்யுத்த வீராங்கனையாக அவர் வெளிப்படுத்திய மிரட்டலான நடிப்பு தென்னிந்திய அளவில் அவரைப் பரவலாக அடையாளம் காட்டியது. அதற்கு முன்பே செல்வராகவனின் திரைக்கதையில் வெளியான 'மாலை நேரத்து மயக்கம்' மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், தற்போது 'டிசி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தை உறுதி செய்துள்ளார்.

இன்னொரு புறம் திரைப்படங்களைத் தாண்டி ஓடிடி உலகிலும் வாமிகா கேபி முத்திரை பதிக்கத் தொடங்கினார்.  குறிப்பாக, விக்ரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் வெளியான 'ஜூபிளி' வெப் தொடரில் அவர் ஏற்ற 'நிலோஃபர் குரேஷி' என்ற கதாபாத்திரம் இந்திய அளவில் மிகப் பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது. 

1950-களின் இந்தித் திரையுலகப் பின்னணியில் அமைந்த அந்தத் தொடரில், வறுமையில் வாடும் ஒரு சாதாரணப் பெண்ணாகத் தொடங்கி, தனது லட்சியக் கனவுகளுக்காகப் போராடி, இறுதியில் முன்னணித் திரை நட்சத்திரமாக உருவெடுக்கும் நிலோஃபரின் வளர்ச்சியை வாமிகா பிரமிப்பூட்டும் வகையில் நடித்திருப்பார். திரைத் துறையின் நிழல் உலகப் போராட்டங்கள், தனக்கான அங்கீகாரத்துக்கான தேடல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அந்த பாத்திரத்தை, நேர்த்தியாகக் கையாண்ட விதம் வியப்பில் ஆழ்த்தியது.

'கிரஹன்' தொடரில் மனு என்ற பாத்திரத்திலும், விஷால் பரத்வாஜின் 'குஃபியா’' திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடித்துத் தனது பன்முகத் திறமையை அவர் நிரூபித்தார்.

தமிழில் அமேசான் ப்ரைமில் வெளியான ‘மாடர்ன் லவ்’ தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ என்ற எபிசோடில் வித்தியாசமான நடிப்பை தந்திருந்தார்.

ஒரே விதமான வணிகச் சட்டகத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல், வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரப் பின்னணி கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வாமிகா காட்டும் ஆர்வம் அவரை சமீபத்திய நடிகைகளில் தனித்துக் காட்டுகிறது. 

'டிசி' திரைப்படத்தின் மூலம், வாமிகா கேபி தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகில் தனக்கான ஒரு வலுவான இடத்தை அமைத்துள்ளார். சந்திரா கதாபாத்திரத்துக்கு அவர் கொடுத்த உயிர், அவரது நீண்டகாலத் திரைப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

‘டிசி’யில் ரசிகர்களை ஈர்த்த ‘சந்திரா’ - யார் இந்த வாமிகா?
DC: விமர்சனம் - வியக்க வைத்ததா லோகேஷ், அருண், அனிருத் ‘விருந்து’?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in