

எனது படத்தின் காட்சியைக் கொண்ட ‘தெறி’ படத்தை நான் ஏன் ரீமேக் செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஹரிஷ் சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் ரீமேக் என்று தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக இயக்குநர் ஹரிஷ் சங்கர் அளித்துள்ள பேட்டியில் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் ‘தெறி’ ரீமேக் குறித்த கேள்விக்கு, “இது ’தெறி’ படத்தின் ரீமேக் என்றால், கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான பெருமையை நான் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்?. ‘உஸ்தாத் பகத் சிங்’ ரீமேக் அல்ல.
இது ஒரு போலீஸ் கதை என்பதால், மக்கள் ’தெறி’, ’டெம்பர்’, ’கப்பர் சிங்’ உள்ளிட்ட சில படங்களுடன் ஒப்பிடுகிறார்கள். அதற்காக அது ரீமேக் என்று ஆகிவிடாது. உண்மையில், ’தெறி’ படத்தில் உள்ள காட்சி ஒன்று எனது ‘கப்பர் சிங்’ படத்தில் இருந்து ஈர்க்கப்பட்டது தான். அப்படி இருக்கும் பட்சத்தில் என் படத்திலிருந்து ஈர்க்கப்பட்ட ஒரு காட்சிக் கொண்ட படத்தினை நான் ஏன் ரீமேக் செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹரிஷ் சங்கர்.