

விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘ரவுடி ஜனார்த்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கி வருகிறார்கள். இதன் படப்பூஜை சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இப்படத்தில் வில்லனாக யார் நடித்து வருகிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இதில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. இதில் வில்லனாக நடிக்க பெரும் சம்பளமும் கொடுக்க முன்வந்துள்ளார்கள். இதனால் விரைவில் இப்படத்தின் ஒப்பந்தத்தில் விஜய் சேதுபதி கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது. ‘உபேனா’ படத்துக்குப் பிறகு தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படமாக இது அமையும் என தெரிகிறது.
விஜய் சேதுபதி நாயகனாக பூரி ஜெகந்நாத் படம், பாலாஜி தரணீதரன் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதனை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்க முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.