

வாரணாசியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டு, ‘வாரணாசி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறியிருக்கிறது ‘வாரணாசி’. 2027-ல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டாலும், எந்த தேதியில் வெளியீடு என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது வாரணாசியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டு, படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. 2027-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேதியினை படக்குழுவினர் யாருமே பகிரவில்லை. ஆனால், வாரணாசியில் வைக்கப்பட்டு இருப்பதால், இது தான் வெளியீட்டு தேதி என்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் நிறைய நாட்கள் விடுமுறை என்பதால், வசூலில் இப்படம் சாதனை படைக்கும் என்று கருதப்படுகிறது. ஐமேக்ஸ் கேமராவில் படப்பிடிப்பு, அண்டார்டிகா மற்றும் ஆப்பிரிக்காவில் படப்பிடிப்பு என பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது ‘வாரணாசி’.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘வாரணாசி’. இதன் ஒளிப்பதிவாளராக பி.எஸ்.வினோத், இசையமைப்பாளராக கீராவாணி உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதனை கே.எல்.நாராயணா மற்றும் ராஜமவுலி இணைந்து தயாரித்து வருகிறார்கள்.