

யஷ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்’ படம் முதல் நாளில் ரூ.140 கோடி வசூலை எட்டியது.
ஷாரூக்கானின் ‘ஜவான்’, ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ படங்களின் முதல்நாள் வசூலை முந்தியுள்ள ‘டாக்ஸிக்’, யஷ்ஷின் முந்தைய ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் முதல்நாள் வசூலை விட பின்தங்கியே உள்ளது.
தகவலின்படி, ‘டாக்ஸிக்’ படம் வெளியான ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் மொத்தமாக சுமார் ரூ.140 கோடி வசூல் செய்துள்ளது. இதில், இந்தியாவில் ரூ.120 கோடியும், வெளிநாடுகளில் ரூ.20 கோடியும் வசூல் செய்துள்ளது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் ரூ.30.50 கோடியும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்த்து 18.50 கோடியும், தமிழகத்தில் 6.75 கோடியும், கேரளாவில் ரூ.2.25 கோடியும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 62.75 கோடியும் முதல் நாளில் வசூல் செய்துள்ளது.
‘டாக்ஸிக்’ படம் அதன் முதல் நாள் வசூலில், ‘கல்கி’, ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’, ‘ஜவான்’ படங்களிம் வசூலை முந்திவிட்ட போதிலும், ‘துரந்தர் 2’, ‘கேஜிஎஃப் 2’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘புஷ்பா 2’ படங்களின் முதல்நாள் வசூலைவிட பின்தங்கியே உள்ளது.
‘டாக்ஸிக்’ படத்துக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையும் படத்துக்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. முதல்நாள் காட்சிகளுக்காக 10 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்தன.
இருப்பு வைக்கப்பட்ட டிக்கெட்டுகளைத் தவிர்த்து முன்பதிவின் மூலம் படம் ரூ.58.27 கோடி வசூல் செய்திருந்தது. இருப்பு வைக்கப்பட்ட டிக்கெட்டுகளையும் சேர்த்து முன்பதிவின் மூலம் மொத்தமாக ரூ.73.43 கோடி வசூல் செய்திருந்தது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘டாக்சிக்’ படத்தில் அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மினி வசந்த், தாரா சுதாரியா உள்ளிடோர் நடித்திருக்கின்றனர்.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி இருக்கின்றது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ஏமாற்றம் அளித்து இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் கூறுகின்றன.