

ஜூனியர் என்.டி.ஆர் படத்திலிருந்து தான் விலகிவிட்டதாக டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க புதிய படமொன்று தயாரிப்பில் இருக்கிறது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க டொவினோ தாமஸ் பேசப்பட்டு வந்தார். இதனை பேட்டிகளிலும் உறுதிப்படுத்தி இருந்தார்.
தற்போது ’பள்ளிச்சட்டம்பி’ படத்தினை ஹைதராபாத்தில் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் டொவினோ தாமஸ். அவரிடம் ஜூனியர் என்.டி.ஆர் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அப்படத்திலிருந்து தான் விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது அவருடைய கதாபாத்திரத்தில் யார் நடித்து வருகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் அப்பத்திரிகையாளர் சந்திப்பில் டொவினோ தாமஸ், “நான் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதில்லை. மலையாளத் திரையுலகில், வழக்கமாக ஒரு முழுப் படத்தையும் ஒரே கட்டமாகவே முடித்துவிடுவோம். ஆனால் தெலுங்கில், ஒரு படம் முழுமையாக முடிவடைய கிட்டத்தட்ட ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் நான் நேரடித் தெலுங்குப் படங்களில் நடிப்பதில்லை. ஒரு படத்தை முடிப்பதற்கு என்னால் மூன்று மாதங்களை ஒதுக்க முடியும். ஆனால் ஒரு முழு வருடத்தை ஒதுக்க இயலாது” என்று தெரிவித்துள்ளார் டொவினோ தாமஸ்.