

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் கேரளா சென்ற போது நடிகர் மம்மூட்டி அதிகாலையில் ஒரு மணி நேரமாக வழி தெரியாமல் தவித்தார். அவருக்கு 10 கிமீ தூரம் இரு சக்கர வாகனத்தில் உடன் வந்து உதவியவருக்குப் பாராட்டு தெரிவித்து, சமூக வலைதளங்களில் மம்மூட்டி பதிவிட்டார்.
காரைக்குடி பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுவிட்டு, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அதிகாலை கேரளாவுக்கு செல்வதற்காக நடிகர் மம்மூட்டிகாரில் மதுரைக்குச் சென்று கொண்டிருந்தார்.
காரைக்குடி - மேலூர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்குவழிச் சாலையில் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் அருகே அதிகாலை 3 மணியளவில் மம்மூட்டியின் கார் வந்தது, அப்பகுதியில் பல சாலைகள் பிரிந்ததால், எந்த சாலையில் செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
கூகுள் மேப் உதவியை நாடியும் சரியான சாலையை அவர்களால் கண்டறிய முடியவில்லை. அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் இருந்தோர் வழிகாட்டியும் சரியான வழியை கண்டறிய முடியாமல் திணறினர்.
இதனால், அவர்கள் மீண்டும் காரைக்குடிக்கே செல்ல முடிவெடுத்தனர். ஒரு மணி நேரமாக அங்கும், இங்குமாக கார் சென்று வந்ததை அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே இருந்த பூலாங்குறிச்சியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கவனித்தார்.
பின்னர், அவர்களிடம் சென்று, நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். காரில் நடிகர் மம்மூட்டி இருந்ததை பார்த்த பாண்டியன் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர், தனது இருசககர வாகனத்தை எடுத்து கொண்டு, 10 கி.மீ. வரை முன்னே செல்ல, மம்மூட்டியின் கார் பின்தொடர்ந்தது. மதுரைக்கு செல்லும் சரியான சாலையைக் காட்டிவிட்டு பாண்டியன் திரும்பினார்.
இதனால், மகிழ்ச்சி அடைந்த மம்மூட்டி, காரில் இருந்து இறங்கி வந்து பாண்டியனுடன் நின்று வீடியோ எடுத்து கொண்டார். அப்போது அவரை கட்டியணைத்து ‘நம்ம பிரண்ட்’ என்றார். தற்போது பாண்டியனை பாராட்டி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மம்மூட்டி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாண்டியன் கூறுகையில், ‘வழி தெரியாமல் தவித்த அவர்களுக்கு முதலில் அங்கு நின்று கொண்டுதான் வழி காட்டினேன். ஆனால் காரில் நடிகர் மம்மூட்டி இருந்ததை பார்த்ததும், எனது இருசக்கர வாகனத்தை காருக்கு முன்னே ஓட்டிச் சென்றவாறு மதுரை செல்ல வழிகாட்டினேன். என்னை பாராட்டி மம்மூட்டி பதிவிட்டது இரட்டிப்பு மகிழ்ச்சி’ என்றார்.