

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலெகர் இயக்கியுள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படம் மவுன படமாக உருவாகி உள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நாளை வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படம் குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. மவுனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய படம் இது” என்றார்.
அதிதி ராவ் ஹைதாரி கூறும்போது, “வார்த்தைகளை விட உணர்வுகள்தான் இதில் என்னை அதிகம் நெகிழ வைத்தது. மவுனமும், நுணுக்கமான உணர்வுகளும் ஒன்றோடொன்று அழகாக இப்படத்தில் இணைந்துள்ளன” என்றார்.