

பாலியல் புகார் வழக்கில் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ இயக்குநருக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் உருவான படம், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’.
சவுபின் சாஹிர், நாத் பாஸி உள்பட பலர் நடித்த இப்படம் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது. உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார். இவர் இப்போது ‘பாலன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் மீது இளம்பெண் ஒருவர், எர்ணாகுளம் போலீஸில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த 2022-ம் ஆண்டு, தான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் தன்னை பாலியல் ரீதியாக சிதம்பரம் துன்புறுத்தியதாகக் கூறி இருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், அப்பெண்ணின் புகாரை மறுத்துள்ள அவர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். இதையடுத்து நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.