

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள இயக்குநர் ரஞ்சித்தின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை திங்கட்கிழமை வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது, இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த ஜன.19-ம் தேதி படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறிய புகாரை அடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ரஞ்சித் கைது செய்யப்பட்டு, எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த இளம் நடிகை கேரவனில் இருந்து அழுதுகொண்டே வெளியே வந்ததை, படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பார்த்ததாகக் கொச்சி காவல் ஆணையர் கலிராஜ் மகேஷ் குமார் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இயக்குநர் ரஞ்சித்தை, போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. கைது செய்யப்பட்ட போது ரஞ்சித்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரிடம் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை என்றும், கூடுதல் ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டியுள்ளதால் போலீஸ் காவல் அவசியம் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம் திங்கட்கிழமை வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. அவருடைய ஜாமீனை நிராகரித்த நீதிமன்றம், அம்மனு மீதான விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.